என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் சேதமடைந்த வாகனம்.
வேன் மீது கார் மோதியதில் பள்ளி தாளாளர் பலி; 6 பேர் படுகாயம்
- திடீரென ரிஸ்வான் கான் சென்ற கார் பள்ளி வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
- 4 பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேராவூரணி:
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது முகமது (வயது 35).
இவர் கிருஷ்ணாஜி பட்டினத்தில் நர்சரி, பிரைமரி பள்ளி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கார்த்திகா (26), சத்யா (25) இரண்டு ஆசிரியைகள் மற்றும் 7 பள்ளி குழந்தைகளை பள்ளி வேனில் அழைத்துக் கொண்டு மல்லிப்பட்டினம் மனோராவிற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக பள்ளி வேனில் வந்துள்ளார்.
அப்போது மல்லிப்பட்டினத்தில் இருந்து மணமேல்குடி செல்வதற்காக ரிஸ்வான் கான் என்பவர் நான்கு பேருடன் காரை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார்.
அப்போது மனோரா அருகில் சென்ற போது திடீரென ரிஸ்வான் கான் சென்ற கார் பள்ளி வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பள்ளி தாளாளர் சையது முகமது சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வேனில் இருந்த பள்ளி ஆசிரியைகள் கார்த்திகா மற்றும் சத்யா இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
பள்ளி குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காரில் இருந்த ரிஸ்வான் கான் உள்ளிட்ட நால்வருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆசிரியைகள் சத்யா, கார்த்திகா இருவரும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரில் சென்ற 4 பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றி சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.