என் மலர்
உள்ளூர் செய்திகள்
பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- சாலையோரம் ஒருவரது நிலத்தில் 6 பனை மரங்கள் எவ்வித அனுமதியுமின்றி வெட்டப்பட்டுள்ளது.
- அத்தியாவசிய தேவைகளுக்காக பனை மரங்களை வெட்ட நேர்ந்தால் கலெக்டரின் அனுமதி பெற்றே பனை மரத்தை வெட்ட வேண்டுமென பனை மரங்கள் பாதுகாப்பு அரசாணை விதி கூறுகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த களர்பதி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் ஒருவரது நிலத்தில் 6 பனை மரங்கள் எவ்வித அனுமதியுமின்றி வெட்டப்பட்டுள்ளது.
மீதமுள்ள 2 மரங்களை வெட்ட முற்படும்போது இது பற்றி தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், அவற்றை தடுத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளார்.
பின்னர் போச்சம்பள்ளி வட்டாட்சியரிடம் முறையிட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இயற்கை தந்த உன்னதமாகவும், மனித வாழ்க்கையில் அங்கமாகவும் விளங்கும் பனை மரங்களை அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பனை மரங்களை வெட்ட தடை செய்ய கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்ஜெட்டில் பனை மரங்கள் வெட்ட தடை விதித்தது.
அத்தியாவசிய தேவைகளுக்காக பனை மரங்களை வெட்ட நேர்ந்தால் கலெக்டரின் அனுமதி பெற்றே பனை மரத்தை வெட்ட வேண்டுமென பனை மரங்கள் பாதுகாப்பு அரசாணை விதி கூறுகிறது.
இந்நிலையில் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விதிகளை பின்பற்றாமல் பனை மரங்கள் வெட்டப்படுவது சகஜமாக நிலவி வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வெட்டப்படும் பனை மரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.