என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலியான ராணுவவீரர் ஆரோன் இளையராஜா.
ஆற்றில் மூழ்கி ராணுவவீரர் பலி
- 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.
- நீண்ட நேரம் தேடி ராணுவ வீரர் உடலை மீட்டனர்.
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மகிமைபுரம் பூண்டி, புதுத்தெருவை சேர்ந்தவர் ஆரோன் இளையராஜா (வயது38).
இவர் திருச்சியில் உள்ள ராணுவ பட்டாலி யனில் ஹவில்தாராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் 2 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று தனது அண்ணன் மகன்களான சூர்யா (18), ஹரீஷ் (12) மற்றும் மனைவி சுகன்யாவுடன் அந்த பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார்.
இவர்கள் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது சூர்யாவும், ஹரீசும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.
இதை பார்த்த ஆரோன் இளையராஜா, ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த அண்ணன் மகன்கள் 2 பேரையும் மீட்டார். பின்னர் அவர் கரைக்கு செல்ல முயன்ற போது தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் திருக்காட்டு ப்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி நீண்ட நேரம் தேடி ராணுவ வீரர் ஆரோன் இளையராஜா உடலை மீட்டனர்.
தகவல் அறிந்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெகதீசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிர மணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆரோன் இளையராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.