என் மலர்
உள்ளூர் செய்திகள்
சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்
- கடந்த 25-ந்தேதி கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் முருகனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
சிவகிரி:
சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இங்கு ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 25-ந்தேதி கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை வழிபாடு, கோவில் சப்பர உலா வருதல் நடைபெற்றது. தினமும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கந்த சஷ்டி முக்கிய நாளான நேற்று மாலையில் சூரனை வதம் செய்வதற்காக குதிரை வாகனத்தில் பாலசுப்பிரமணியசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் மேலரத வீதியில் முதலில் யானைமுகம் கொண்ட சூரனையும், பின்னர் சிங்கமுகம் கொண்ட சூரனையும், இறுதியில் ஏழாம் திருவிழா மண்டபம் முன்பாக சூரபத்மனையும் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.