என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாம்பியன் பட்டத்தை வென்ற வாசுதேவநல்லூர் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம்.
வாசுதேவநல்லூர் அருகே மாநில அளவிலான யோகாசன போட்டி
- வாசுதேவநல்லூர் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 23-வது மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.
- மாணவர்கள் ஓம்கார ஆசனம், விருச்சிக ஆசனம், காலபைரவ ஆசனம் போன்ற பல்வேறு வகையான யோகாசனங்கள் செய்து அசத்தினர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் அருகே உள்ள தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு பற்றிய 23-வது மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.
இதில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் 600 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
போட்டியில் பள்ளி மாணவ- மாணவிகள் ஓம்கார ஆசனம், விருச்சிக ஆசனம், காலபைரவ ஆசனம், விபரீத தண்டாசனம் போன்ற பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காண்பித்து அசத்தினர்.
இதில் மாநில அளவில் பல்வேறு பிரிவுகளாக நடந்த போட்டியில் தரணி பள்ளி மாணவர்கள் பொதுபிரிவில் 43 தங்கம், 23 வெள்ளி, 8 வெண்கலம், சாம்பியன்ஷிப் பிரிவில் 3 மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் ஆப் சாம்பியன் பட்டத்தை வாசுதேவநல்லூர் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், சாம்பியன்ஷிப் பட்டத்தை அரியநாயகிபுரம் ஸ்ரீ லட்சுமி மெட்ரிக்குலேஷன் பள்ளியும் தட்டிச் சென்றனர். தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மாநில அளவில் முதல் பரிசு பெற்றனர். 2-ம் பரிசை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ -மாணவிகள் தட்டிச் சென்றனர்.
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தரணி குழுமத்தின் தலைவர் பழனி பெரியசாமி, சேர்மன் சம்பத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். யோகாசன போட்டிக்கு சிறப்பு விருந்தினராக தரணி பள்ளி நிர்வாகத்தின் தாளாளர் ராமலிங்கம், தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் குழந்தைசாமி ஆகியோர் பங்கேற்று உலக வெப்பமயமாதலை தடுப்பதற்கு உண்டான வழிமுறைகளையும், யோகா பற்றிய விழிப்புணர்வையும், நன்மைகளையும் மாண வர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழையும் வழங்கினார்.
விழாவில் யோகா ஆசிரியர்கள், பள்ளியின் ஆசிரிய- ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரணா யோகா பயிற்சி பள்ளியின் ஆசிரியரும், தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு தென்காசி மாவட்ட செயலாளருமான அருண்குமார் செய்திருந்தார்.