என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டி ரெயில் நிலைய அதிகாரியிடம் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்ட காட்சி.
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்- நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை
- தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்கி வருகிறது.
- கடந்த 24-ந் தேதி முதல் நெல்லைக்கு வந்தே பாரத் விரைவு ரெயில் இயக்கப்பட்டது
கோவில்பட்டி:
கோவில்பட்டி ரெயில் நிலைய அதிகாரியிடம், நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது:-
உலக தர வசதிகளை கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இந்திய நகரங்களுக்கு இடையே பயணிக்கும் அதிவேக தொடர்வண்டி ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்கி வருகிறது.
தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் மையப் பகுதியாக கோவில்பட்டி நகரம் அமைந்துள்ளது. இந்த 3 மாவட்டங்களில் வசிக்கும் சுற்று வட்டார 40 கிலோமீட்டர் பகுதிகளை சேர்ந்த பல லட்சம் மக்களின் தொலைதூர பயணத்திற்கு கோவில்பட்டி ரெயில் நிலையம் மிக முக்கியமான போக்குவரத்து மைய பகுதியாக உள்ளது.
கல்வி வேலை தொழில் ஆகிய காரணங்களுக்காக தொலைதூரம் செல்ல நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய ரெயில் நிலையங்களில் கோவில்பட்டி ரெயில் நிலையமும் முதன்மை யானது.
கடந்த 24-ந் தேதி முதல் நெல்லை- சென்னை எழும்பூர் இடையே வந்தே பாரத் விரைவு ரெயில் இயக்கப்பட்டது. ஆனால் இந்த ரெயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் தரப்படவில்லை.
இதனால் கோவில்பட்டி பகுதி மக்கள் வந்தே பாரத் ரெயில் சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே கோவில்பட்டி மக்களின் தொலைதூர பயணத் தேவைக்கான வந்தே பாரத் ரெயிலை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் ராஜா என்ற விஜி, செயலாளர் அசோக், துணைச் செயலாளர் ராஜகுரு, பொருளாளர் சந்தனகுமார், துணைத் தலைவர் ஜெய பாஸ், அசோக் குமார், பாலசுந்தரம், ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், சந்தரக் கண்ணன் உள்ளிட்ட நுகர்பொருள் விநியோ கஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.