என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கடும் எதிர்ப்பு நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கடும் எதிர்ப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/03/23/1854054-5-sipcot-opp.webp)
நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கடும் எதிர்ப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழக அரசு தொழில் துறையின் மூலம், சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க நிலம் எடுப்பு பணிக்காக சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இந்த நிலையில், வளையப்பட்டி, அரூர் பஞ்சாயத்துக்களில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. அரூர் பஞ்சாயத்தில், கடந்த ஜனவரி 26-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், சிப்காட் அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய கிராம பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசு தொழில் துறையின் மூலம், சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க நிலம் எடுப்பு பணிக்காக சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிப்காட் அமைக்க எதிர்ப்பு
சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சிப்காட் எதிர்ப்பு குழு சார்பில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில், விளை நிலங்களில் சிப்காட் வருவதை தவிர்க்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, சம்பந்தப்பட்ட 5 கிராம பஞ்சாயத்து தலைவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், வளையப்பட்டி, அரூர் பஞ்சாயத்துக்களில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. அரூர் பஞ்சாயத்தில், கடந்த ஜனவரி 26-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், சிப்காட் அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மீண்டும் தீர்மானம்
ஆனால், அவற்றின் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால், நேற்று நடந்த கூட்டத்தில், மீண்டும் அந்தத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அப்போது அங்கு இருந்த சிலர், சிப்காட் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனால், பஞ்சாயத்து தலைவர், செயலாளர், அதிகாரிகள், எந்த தீர்மானத்தையும் எழுதாமல் காலம் தாழ்த்தினர்.
கோபம் அடைந்த பொதுமக்கள், கிராமசபைக் கூட்டம் என்பது, பொதுமக்களால் கொண்டு வரப்படும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகள் சொல்வதை தீர்மானங்களாக நிறைவேற்றக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு, பஞ்சாயத்து செயலாளர் ரவிச்சந்திரன், அரசு அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதை தான் எழுதுவோம் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பஞ்சாயத்து அலுவலகம் முன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மிரட்டல்
அதேபோல், பொது மக்களின் கோரிக்கையை தீர்மானமாக எழுத முடியாது எனக்கூறிய அரூர் பஞ்சா யத்து செயலாளர் கருப் பண்ணன், தீர்மான நோட்டை எடுத்துக் கொண்டு, அலுவலகத்துக்குள் ஓட்டம் பிடித்தார்.
அவற்றை படம் பிடித்தவர்களின் கேமராவை பறிக்க முயன்றதுடன், அவர்களுக்கு மிரட்டல் விடுத்தார். பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, சிப்காட்டிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றாமல், கிராமசபைக் கூட்டம் பாதியில் முடிந்தது.