என் மலர்
உள்ளூர் செய்திகள்
பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
- பஸ்சுக்காக மாணவர்கள், பொதுமக்கள் மாலை 4 மணி முதல் காத்திருந்தனர்.
- புதைவடம் பதிக்கும் பணியால் அந்த சாலை ஒற்றையடி சாலை போல் குறுகியது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருமுல்லைவாசல் பகுதிக்கு தினந்தோறும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பஸ்கள் மூலம் பல்வேறு கிராமங்களிருந்து பள்ளி மாணவ,மாணவிகள், பொதுமக்கள் சீர்காழிக்கு வந்து செல்கின்றனர்.
வழக்கம்போல் திருமுல்லைவாசல் செல்லும் பஸ்சிக்காக பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் புதிய பேருந்துநிலையத்தில் மாலை 4 மணி முதல் காத்திருந்தனர்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் பேருந்துகள் வரவில்லை.
இரவு 7மணியை கடந்தும் பேருந்துகள் ஏதும் திரு முல்லைவாசல் வழிதடத்திற்கு வராததால் பேருந்திற்காக காத்திருந்த பள்ளி மாண வர்கள் பேருந்து நிலையம் வந்த மற்ற கிராம பேருந்து களையும் நிறுத்தி சிறைபி டித்தனர்.
மாணவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் பேருந்துகள் முன்னேறி செல்லமுடியாமல் மறித்து ஓட்டுனர் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் 7.30மணியளவில் வந்த திருமுல்லைவாசல் வழியாக கூழையார் செல்லும் பேருந்தில் மக்கள் மாணவிகள் ஏறினர். பஸ்சில் இடம் இல்லாமல் படிகளில் மாணவிகளும் தொங்கி கொண்டு நிற்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த பயணிகள் அந்த பேருந்தையும் எடுக்கவி டாமல் சிறைபிடித்தனர்.
பின்னர் அரசு போக்குவரத்து கழக சீர்காழி கிளை மேலாளர் வடிவேல் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சீர்காழியி லிருந்து திருமுல்லைவாசல் செல்லும் சாலையில் வடகால், கடவாசல் பகுதியில் மின்சார வாரியம் சார்பில் புதைவடம் பதிக்கும் பணியால் அந்த சாலை ஒற்றையடி சாலை போல் குறுகியதால் பெரும் போக்குவரத்து நெருக்கடியால் பல மணிநேரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.
இதனால் தான் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தார் .
இதனையடுத்து மறியலை கைவிட்டு மாணவ, மாணவிகள் பேருந்துகளில் ஏறி சென்றனர். இதனால் சீர்காழி புதியபேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.