என் மலர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் இன்று காலை திடீர் மழை
- கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் அவதி அடைந்தனர்.
- சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
கோவை
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பகல் நேரங்களில் மிதமான வெயிலும், மதியத்திற்கு பிறகு அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை முதல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. காந்திபுரம், அண்ணாசிலை, கிராஸ்கட் ரோடு, ரெயில் நிலையம், பாப்பநாயக்கன் பாளையம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
காலை நேரத்தில் பெய்த மழை காரணமாக காலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.
மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர் குடைபிடித்தபடி பள்ளியில் சென்று விட்டு வந்தனர். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வந்த பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் அனைவருமே தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குடைபிடித்தபடி பயணித்தனர்.
ஒரு சிலர் மழையில் நனைந்தபடியே வாகனங்களிலும், நடந்தும் செல்வதையும் காண முடிந்தது.
மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் சுவர்ட்டர் அணிந்துள்ளனர். கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதேபோல் புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.