என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாம்பவர் வடகரையில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்.
சாம்பவர்வடகரையில் சூரியகாந்தி பயிர் சாகுபடி அதிகரிப்பு

- தென்காசி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரிடப்பட்டு உள்ளது.
- சூரியகாந்தி பயிர் மிகவும் எளிமையான பயிர். குறைந்த தண்ணீரில் நிறைந்த மகசூல் தரக்கூடியது.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டத்தில் அதிக லாபம் தரும் சூரியகாந்தி பயிர் சாகுபடியானது சங்கரன்கோவில், கடையநல்லூர், பாவூர்சத்திரம், சாம்பவர்வடகரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி ஆகியவை முக்கிய பயிர்களாக விளைவிக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்திற்கு நடப்பாண்டில் மட்டும் 1,250 ஏக்கர் பயிரிடலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் காரீப் என்று சொல்லக்கூடிய இந்த பருவத்தில் சுமார் 500 ஏக்கர் சூரியகாந்தி பயிரிடப்பட்டுள்ளது.
அதில் செங்கோட்டை வட்டாரம் சாம்பவர்வடகரை பகுதியில் மட்டும் சுமார் 175 ஏக்கரில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சூரியகாந்தி பயிர் மிகவும் எளிமையான பயிர். குறைந்த தண்ணீரில் நிறைந்த மகசூல் தரக்கூடியது. விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரக்கூடிய எண்ணை வித்து பயிராகும்.
தற்போது அந்த பகுதியில் காண்போரை கவர்ந்து இழுக்கும் வகையில் சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்குகிறது.சூரியகாந்தி பயிரானது 120 நாள்கள் வயதுடைய வீரிய ஒட்டு பயிர். 5 முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
சூரியகாந்தியில் ஒரு ஏக்கருக்கு 10 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கிறது. நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகளிடம், வியாபாரிகள் நேரடியாக வந்து சூரியகாந்தி கொள்முதல் செய்கின்றனர்.இதனால் போக்குவரத்து செலவின்றி அதிக லாபம் கிடைக்கிறது.
மேலும் தற்போது எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தியில் முக்கிய தொழில்நுட்பமாக பூக்கும் தருவாயில் மகரந்தச்சேர்க்கை தீவிரமாக நடைபெறுவதால் அதிக மகசூல் கிடைக்கும். தேனீக்கள், குழவிகள், வண்டுகள், பூச்சிகள் முதலானவை மகரந்த சேர்க்கையை துரிதப்படுத்தபடுகிறது.
ஆகையால் சூரியகாந்தி பயிரிடும் பகுதிகளில் தேனீ பெட்டிகளை அதிகமாக வைப்பதால் மகரந்தச் சேர்க்கை அதிகமாக ஏற்பட்டு மகசூல் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது.விவசாயிகள் பெரும்பாலானோர் தற்போது அதிக அளவில் பூச்சி மருந்துகளை கையாளுவதால் வண்டுகள் எண்ணிக்கை மிக குறைந்து விட்டது.
இதனால் இயற்கை முறையில் சாகுபடி செய்ய கிராமப்புற விவசாயிகளுக்கு பயிற்சிகளையும் செயல்விளக்கங்களையும் வேளாண் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
செங்கோட்டை வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின் பேரில் வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் ஆலோசனையின் பேரில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் தலைமையில் அவ்வப்போது சாம்பவர் வடகரை பகுதியில் பூக்களில் மகரந்த சேர்க்கைக்காக செயல் விளக்கங்கள் செய்து காண்பித்து விவசாயிகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.