என் மலர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் விடிய, விடிய கனமழை: ரெயில்வே சுரங்கப்பாதைகளை மூழ்கடித்த வெள்ளம்
- சில இடங்களில் சாலையோரங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
- மழையுடன் கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கோவை:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது லேசான மழையும், சில நேரங்களில் கனமழையும் கொட்டி தீர்த்தது.
நேற்று காலை வெயில் வாட்டி வதைத்தது. மதியத்திற்கு பிறகு காலநிலை அப்படியே மாறியது. வெயில் மறைந்து வானில் மேகமூட்டங்கள் திரண்டு மேகமூட்டமாகவே காட்சியளித்தது.
தொடர்ந்து நள்ளிரவில் கோவை மாவட்டம் முழுவதுமே பரவலாக மழை பெய்தது.
கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், உக்கடம், சுந்தராபுரம், குனியமுத்தூர், கணபதி, ரெயில் நிலையம் பகுதி, டவுன் ஹால், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவில் கனமழை பெய்தது. விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது.
இதனால் அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
சில இடங்களில் சாலையோரங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதி, சோமசுந்தரம் மில்ரோடு பாலம், வடகோவை மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானி பாலம் உள்பட மாநகரில் உள்ள பாலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
குறிப்பாக சோமசுந்தரம் மில்ரோடு ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் பாலத்தில் மழைநீர் பாலத்தை மூழ்கடிக்கும் வகையில் மழைநீர் தேங்கியது. இதனால் பாலங்களின் கீழ் பகுதிகளில் வாகனங்கள் செல்வது, உடனடியாக நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
சில இடங்களில் காலை நேரத்திலேயே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடியே சென்றன. காலை நேரத்தில் பெய்த இந்த மழை காரணமாக அதிகாலையில் வேலைக்கு செல்வோர் உள்பட பல்வேறு தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியால் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மழையுடன் கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உக்கடம், சுந்தராபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. அங்கு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்து துறையினர் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பாலங்களில் தண்ணீர் தேங்கிய தகவல் கிடைத்ததும், மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து, ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தீபாவளி நேரத்தில் மக்கள் அதிகம் கூடும் கடை வீதிகளுக்கு செல்லும் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களும், பாதிப்புக்குள்ளானார்கள்.
புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, நெகமம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், அம்பாரம்பாளையம், கோவில்பாளையம், சரவணம்பட்டி, சூலூர், கருமத்தம்பட்டி, சோமனூர், நீலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
மேட்டுப்பாளையம், அன்னூர், சிறுமுகை, காரமடை, பெள்ளேபாளையம், பொகலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக அந்த பகுதிகளில் உள்ள குளங்கள், குட்டைகள் அனைத்தும் நிரம்பி, தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது. பல இடங்களில் வீடுகளும், வீட்டின் தடுப்பு சுவர்களும் இடிந்துள்ளன.
தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிரவு கனமழை பெய்தது. மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, திடீரனெ காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. வனப்பகுதி மற்றும் அதனையொட்டிய குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மருதமலை அடிவார பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியான ஐ.ஓ.பி காலனியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.
இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள சாலை ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வரமுடியாத நிலை உள்ளது. அந்த பகுதியை சுற்றிலும் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் தனித்தீவு போன்றே காட்சியளிக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, மாற்றுப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.