search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளியை கிலோ ரூ.80க்கு விற்பனை செய்து வரும் நீலகிரி சகோதரர்கள்
    X

    தக்காளியை கிலோ ரூ.80க்கு விற்பனை செய்து வரும் நீலகிரி சகோதரர்கள்

    • நீலகிரி உள்பட பல்வேறு இடங்களிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தொடர் மழையால் வரத்து குறைந்ததே காரணமாகும்.
    • மலைக்கிராமத்தில் தக்காளியை விளைவித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வரும் சகோதரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    ஊட்டி:

    தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை புதிய உச்சத்தில் உள்ளது.

    தமிழகத்தின் பல இடங்களில் ரூ.130 முதல் ரூ.150 வரையும், வெளி மாநிலங்களில் சில இடங்களில் ரூ.200 என்ற அளவிலும் தக்காளியானது விற்பனையாகி வருகிறது.

    தக்காளியின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60க்கு மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

    தக்காளி விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியை சேர்ந்த சகோதரர்களான ராமன், புட்டுசாமி ஆகியோர் 2 சகோதரர்கள் தாங்கள் பயிரிட்டு அறுவடை செய்துள்ள தக்காளியை கிலோ ரூ.80க்கு விற்பனை செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    நீலகிரி உள்பட பல்வேறு இடங்களிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தொடர் மழையால் வரத்து குறைந்ததே காரணமாகும்.

    இதற்கிடையே மலைக்கிராமத்தில் தக்காளியை விளைவித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வரும் சகோதரர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாய சகோதரர்கள் கூறியதாவது:-

    விவசாயம் தான் எங்களுக்கு தொழில். இந்த பகுதியில் எல்லோரும் சாகுபடி செய்யும் மலைக்காய்கறிகளைத் தான் நாங்களும் சாகுபடி செய்து வந்தோம். வீட்டு தேவைக்காக ஒருமுறை தக்காளி பயிரிட்டோம். நல்ல விளைச்சல் தந்தது. இதனால் அடுத்து கொஞ்சம் அதிகமாக தக்காளியை பயிரிட்டோம்.

    ஏப்ரல் மாதம் மைசூரில் இருந்து 1000 தக்காளி நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்தோம். அப்போது தக்காளி விலை ரூ.10 தான். கால நிலை மாற்றத்தால் 400 நாற்றுகள் பட்டுப்போயின.

    600 நாற்றுகள் உயிர் பிழைத்தன. செடி சாயாமல் இருக்க ரொம்ப சிரமப்பட்டு பந்தல் கட்டி பராமரித்தோம். எங்கள் உழைப்புக்கு இப்போது நல்ல பலன் கிடைத்து விட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் ரூ.150க்கு அதிகமாக தக்காளி விற்கும் நிலையில், உள்ளூர் மக்களுக்காக ரூ.80க்கு தக்காளியை நாங்கள் விற்பனை செய்து வருகிறோம்.

    குந்தா பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை தக்காளி விளைச்சலுக்கு ஏற்றது. மாட்டுச்சாண உரமிட்டு தக்காளியை சாகுபடி செய்தோம். இப்பகுதியில் வனவிலங்குகள் தொந்தரவு அதிகம். காட்டெருமை, கரடி, கடமான், குரங்குகள் கூட்டம் கூட்டமாக வரும்.

    வனவிலங்குகள் செடிகளை சேதப்படுத்தாமல் இருக்க இரவு, பகலாக காவல் காத்தோம். மேலும் தக்காளி செடிகளை பராமரிக்க நிறைய செலவு ஆகிறது.

    தக்காளி ரூ.200க்கு மேல் விற்றாலும் பரவாயில்லை. எங்களுக்கு கிலோவுக்கு ரூ.80 கிடைத்தால் போதும். ஆயிரம் கிலோவுக்கு மேல் தக்காளி அறுவடை செய்து உள்ளூர் மக்களுக்கு குறைந்த விலையில் கொடுத்திருக்கிறோம்.

    வெளியூரில் இருந்து எல்லாம் ஆட்கள் வந்து தக்காளியை அதிக விலைக்கு கேட்டார்கள்.

    உள்ளூர் மக்கள் தேவைக்கே பற்றாக்குறையாக உள்ள நிலையில், வெளியூரில் தக்காளியை விற்க மனமில்லை. குந்தா மக்களுக்கு நாங்கள் செய்யும் சேவையாகவே இதனை கருதுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இவர்களிடம் குந்தா மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போட்டி போட்டு வந்து தக்காளியை வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து குந்தாவை சேர்ந்த பெண்கள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கும் மேல் விற்கப்படுகிறது. இது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    Next Story
    ×