என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருத்தணியில் கடத்தப்பட்ட தொழிலாளியை 12 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
- கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக், நிர்மல்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள அகூர் ஊராட்சி, நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடமுனி (42). தொழிலாளி. இவர் நேற்று காலை தனது தாய் லட்சுமியுடன் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுசென்றார். பின்னர் மாடுகளை விவசாய நிலத்தில் கட்டி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
நத்தம் கிராமத்தில் உள்ள கோவில் மண்டபம் அருகே வந்தபோது காரில் வந்த 4 பேர் கும்பல் திடீரென கத்தி முனையில் மிரட்டி வெங்கட முனியை காரில் கடத்தினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் லட்சுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த கிராமமக்கள் கடத்தல் கும்பலை பிடிக்க முயன்றனர்.
ஆனால் அவர்கள் கத்தியால் வெட்ட முயன்றனர். இதனால் பயந்து போன பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் கடத்தல் கும்பல் வெங்கடமுனியை காரில் கடத்தி சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திருவாலங்காடு ஒன்றியம் சந்தான கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வெங்கடமுனியிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், பல முறை பணம் கேட்டு வெங்கடமுனி தராததால் கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து சென்று இருப்பதும் தெரிந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பின்தொடர்வதை அறிந்த கடத்தல் கும்பல் அங்கிருந்து வேலூர் பகுதிக்கு வந்து இருப்பது தெரியவந்தது. போலீசார் விரட்டிச்சென்று காரில் கடத்தப்பட்ட வெங்கடமுனியை பத்திரமாக மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக், நிர்மல்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். கடத்தப்பட்ட வெங்கட முனியை 12 மணிநேரத்தில் போலீசார் மீட்டு உள்ளனர். இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.