என் மலர்
உள்ளூர் செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
- கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
- உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் புதிதாக தபால்நிலையம் கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் அந்த இடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும் என்பதால் அந்த இடத்தை வேறு எந்தப்பணிக்கும் ஒதுக்கக்கூடாது என கூறினார். இது குறித்து கேள்வி கேட்ட பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம், யாரும் பேசக்கூடாது, ஊராட்சி மன்றத்தலைவர் மட்டும்தான் பேசவேண்டும் என அவர் கூறியதாகத்தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஊத்துக்காடு ஊராட்சிமன்றத்தலைவர் சாவித்திரி மணிகண்டன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலியட் சீசர், இன்ஸ்பெக்டர் பிரேசில் பிரேம் ஆனந்த் ஆகியோர் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.