என் மலர்
உள்ளூர் செய்திகள்

மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு முயற்சிகளை செய்து வரும் விஜய் வசந்த் எம்.பி.

- சாலைகள் செப்பனிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விஜய் வசந்த் எம்.பி. உறுதி அளித்தார்.
- இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதி மலைகளால் சூழப்பட்டு மலைவாழ் கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு நல திட்டங்களை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த தினங்களாக பேச்சிப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மலைவாழ் கிராமங்களான கோதையார், குற்றியார், தோட்டமலை, தச்சமலை ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டு அறிந்தார்.
குறிப்பாக சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலைமையில் காணப்படுவதால் போக்குவரத்திற்கு மக்கள் சிரமப்படுவதாக தெரிவித்தனர். சாலைகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரே தனது வாகனத்தை சாலைகளில் ஓட்டி அவர்களின் இன்னல்களை தெரிந்து கொண்டார்.
சாலைகள் செப்பனிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். மேலும் இங்கு இயங்கிக் கொண்டிருந்த பேருந்துகள் திடீர் என்று நிறுத்தி வைக்கப்பட்டதை மக்களிடம் இருந்து தெரிந்து கொண்டு உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த பகுதிகளில் மீண்டும் பேருந்து போக்குவரத்தை ஆரம்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த பகுதிகளில் பல வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்க முயற்சிகள் எடுத்து வருகிறார். சில தொழில்நுட்ப சிக்கல்கள் நிலவி வருவதால் மின்சாரம் வழங்க சிரமம் இருப்பதை மக்களுக்கு எடுத்துக் கூறி அந்த சிக்கல்களுக்கு தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்படும் என விளக்கினார்.
இந்த சந்திப்பின் போது வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் வினுட்ராய், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், பேச்சிப்பாறை ஊராட்சி கமிட்டி தலைவர் குமார் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.