search icon
என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
    • எங்களால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பெற முடியவில்லை என்றாலும் கூட, மக்களின் நம்பிக்கையை பெற்று, மரியாதைக்குரிய சதவீதத்தை பெற்றிருக்கிறோம்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் 23 இந்தியா கூட்டணிகள் சேர்த்து பெற முடியாத மத்திய ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மை என கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைந்துள்ளது. மத்திய அரசு அனைத்து மக்களின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது.

    வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெற வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருக்கிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. எங்களால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பெற முடியவில்லை என்றாலும் கூட, மக்களின் நம்பிக்கையை பெற்று, மரியாதைக்குரிய சதவீதத்தை பெற்றிருக்கிறோம். அந்த சதவீதத்தின் அடிப்படையிலே பா.ஜனதா தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் தொடர்புடைய உழைப்பை நான் பாராட்டுகிறேன். இந்த சதவீதம் என்பது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நிச்சயமாக எங்களுக்கு அடித்தளமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதனை நோக்கியே எங்களது பயணம் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவிலில் வழிபாடு செய்வதற்காக பக்தர் ஒருவர் ஒரு தேங்காயை உடைத்து கொண்டு வந்தார்.
    • அதிசய தேங்காயை கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து பார்த்து ரசித்து சென்றனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் ரெயில்வே திருமண மண்டபத்தின் பின்புறம் தீப்பாய்ந்த அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

    தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில், இந்த கோவிலில் வழிபாடு செய்வதற்காக பக்தர் ஒருவர் ஒரு தேங்காயை உடைத்து கொண்டு வந்தார். அந்த தேங்காயில் 4 சில் இருந்தது.

    வழக்கமாக ஒரு தேங்காய் உடைக்கும் போது அதில் 2 சில் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த தேங்காயில் 4 சில் இருந்தது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    இந்த அதிசய தேங்காயை கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து பார்த்து ரசித்து சென்றனர்.

    • காவிரி நீர் கிடைக்காததால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது.
    • 4 மாவட்டங்களிலும் இதுவரை 1.75 லட்சம் ஏக்கரில் முன்பட்ட சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    மேட்டூர் அணை 2020-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளாக டெல்டா பாசனத்துக்கு உரிய காலத்தில் அதாவது ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டாலும், அணைக்கு நீர்வரத்து இல்லாததால், அக்டோபர் 10-ந்தேதி முற்றிலுமாக மூடப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய 167.25 டி.எம்.சி.யில் 78.07 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியது.

    இதனால், கடந்த ஆண்டு குறுவை பருவ நெல் சாகுபடிக்கு கூட முழுமையாக காவிரி நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டதால், மகசூல் இழப்பு ஏற்பட்டது. மேலும், காவிரி நீர் கிடைக்காததால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டது.

    குறுவை சாகுபடிக்கு சுமார் 100 டி.எம்.சி.யும், சம்பா சாகுபடிக்கு 230 டி.எம்.சி.யும் என மொத்தம் 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால், மேட்டூர் அணையில் தற்போது நீர்மட்டம் 43.64 அடியும், நீர் இருப்பு 14.04 டி.எம்.சி.யும் மட்டுமே உள்ளது. இதை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், பாசனத்துக்கு மேட்டூர் அணையை கடந்த 12-ந்தேதி திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 4 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை திறப்பு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டது.

    இதன் காரணமாக ஆற்றுப் பாசனத்தை சார்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்க முடியாத நிலையில் உள்ளதால், நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன. இதனால் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு மோட்டார் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் குறுவை சாகுபடியில் இயல்பான பரப்பளவு 3.50 லட்சம் ஏக்கராக இருந்தாலும், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால், கிட்டத்தட்ட 3 லட்சம் ஏக்கருக்குதான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.10 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 73 ஆயிரத்து 400 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 500 ஏக்கர் என்ற இலக்கில் 72 ஆயிரத்து 500 ஏக்கரிலும் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 92 ஆயிரம் ஏக்கரில் இதுவரை 29 ஆயிரம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 1,125 ஏக்கரிலும் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் இதுவரை 1.75 லட்சம் ஏக்கரில் முன்பட்ட சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.

    ஆழ்துளை குழாய் மோட்டார் பம்ப்செட் மூலம் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்கும் நிலத்தடி நீர் ஆதாரம் மிக முக்கியமானதாக இருக்கிறது. தற்போது காவிரி நீருக்கு வாய்ப்பில்லாத நிலையில், தென்மேற்கு பருவமழை பெய்வதை பொருத்தே குறுவை சாகுபடியில் இலக்கை எட்ட முடியும். தொடர்ந்து பரவலாக மழை பெய்தால் மட்டுமே ஆழ்துளை குழாய் மூலம் செய்யப்படும் குறுவை சாகுபடியும் வெற்றிகரமாக அமையும் என்ற நிலை நிலவுகிறது.

    கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்து, உபரிநீர் பெருக்கெடுத்து வந்தால் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கமாக உள்ளது. தற்போது, அதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில் ஒரு போக சாகுபடிக்காவது காவிரி நீர் கிடைக்குமா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

    இதனால் காவிரியில் நமக்குரிய பங்கீடு கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் விவசாயிகள் மத்தியில் மேலோங்கி உள்ளது.

    • லாலாபேட்டை, குளித்தலை ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்றும், நாளையும் சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • திருச்சியில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக மாலை 5.10 மணிக்கு புறப்படும்.

    தஞ்சாவூர்:

    தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் வௌயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    லாலாபேட்டை, குளித்தலை ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்றும், நாளையும் சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி சேலம்- மயிலாடுதுறை மெமு விரைவு ரெயில் (வண்டி எண்.16812) இன்றும், நாளையும் பிற்பகல் மதியம் 2.05 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு கரூரை வந்தடையும். கரூர்- மயிலாடுதுறை இடையே சேவை இருக்காது. அதே நேரத்தில் கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்றும், நாளையும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் கரூரில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும். வண்டி எண் 16812 என்ற ரெயில் நின்று செல்லும் அதே நிறுத்தங்களில் இந்த சிறப்பு ரெயில் நின்று செல்லும்.

    இதேப்போல் திருச்சி- ஈரோடு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (வண்டி எண். 06809) வழக்கமாக திருச்சியில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக மாலை 5.10 மணிக்கு புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.ம.மு.க தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ளது. நாங்கள் எங்களது பாதையில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம்.
    • தமிழகத்தில் கடந்த 2019-ல் பா.ஜ.க.வுக்கு லேசான எதிர்ப்பு இருந்தது. ஆனால் தற்போது பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பே கிடையாது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூரில் இன்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    காவிரி நீர் விவாகரத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவகுமார் ஆகியோரிடம் சோனியா காந்தி மூலம் தமிழக முதலமைச்சர் பேசி தமிழகத்திற்கு உரிய, நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் பெற்று தர வேண்டும். ஏனென்றால் கர்நாடகாவில் ஆளுவது காங்கிரஸ் கட்சி தான். தொடர்ந்து கர்நாடகாவிற்கு அழுத்தம் கொடுத்து தண்ணீர் பெற்று தர வேண்டும். மாறாக டெல்லியில் போய் பேசுவதால் எந்த பயனும் இல்லை.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டோம். பல தொகுதிகளில் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. பணத்தை நம்பாமல் மக்களை நம்பி போட்டியிட்டோம்.

    இதேபோல் வருகின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. 13 சதவீதத்திற்கும் மேல் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது.

    இரட்டை இலை சின்னம் இருந்தும் பல தொகுதிகளில் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு தலைமை சரியில்லாததே காரணமாகும். தாங்கள் தான் எல்லாம் என்ற நினைப்போடு அ.தி.மு.க.வில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய தொகுதியில் கூட அவர்களால் டெபாசிட் பெற முடியவில்லை.

    எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து 10 தேர்தலில் அ.தி.மு.க தோல்வியை கண்டுள்ளது. சிலர் தங்களது தவறை உணர்ந்து திருந்தினால் தான் அ.தி.மு.க பலப்படும்.

    உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து அ.தி.மு.கவின் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம் சரியான தலைமை இல்லாததால் பலவீனம் அடைந்துள்ளது.

    அ.ம.மு.க தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ளது. நாங்கள் எங்களது பாதையில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க.வுடன் இணையும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை.

    தமிழகத்தில் கடந்த 2019-ல் பா.ஜ.க.வுக்கு லேசான எதிர்ப்பு இருந்தது. ஆனால் தற்போது பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பே கிடையாது. பெட்ரோலியத்தை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம் என மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி கூறி உள்ளதை பொறுத்திருந்து பார்ப்போம். மக்களுக்கு, நாட்டுக்கு எது நல்லதோ அதனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எலான் மஸ்க் 'தப்பாட்டம்' படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
    • ஒரு தமிழ்ப் படத்தை வைத்து உருவாக்கிய மீம்ஸை எலாக் மஸ்க் உலக அளவில் பிரபலமாக்கிவிட்டார்.

    டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், அவருக்குச் சொந்தமான எக்ஸ் தளத்தில் தமிழ்ப் படமான 'தப்பாட்டம்' படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

    ஒரு இளநீரை படத்தின் நாயகி ஸ்டிரா வைத்து குடிக்க, அந்த நாயகியின் வாயிலிருந்து ஒரு ஸ்டிராவை வைத்து நாயகன் குடிக்கும் ஒரு காட்சி அது.

    2017ம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் இயக்கத்தில் துரை சுதாகர், டோனா ரொசாலியோ நடித்த படமான 'தப்பாட்டம்' படத்தின் அந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களாக பல முறை பரவியிருக்கிறது.

    "ஐபோன், ஆப்பிள், டேட்டா" ஆகியவற்றை மையமாக வைத்து யாரோ ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் ஒன்றை இன்று எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.

    ஒரு தமிழ்ப் படத்தை வைத்து உருவாக்கிய மீம்ஸை எலாக் மஸ்க் உலக அளவில் பிரபலமாக்கிவிட்டார்.

    இந்நிலையில், தப்பாட்டம் படத்தின் கதாநாயகன் துரை சுதாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "சிறு முதலீட்டுடன் எடுக்கப்பட்ட என் படத்தை உலகளவில் பேமஸ் ஆக்கிய எலான் மஸ்க்கிற்கு ரொம்ப நன்றி. இது தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம். எலான் மஸ்க்கிற்கு இந்த மீம் சென்று சேர உதவிய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எனது நன்றிகள்" என்று அவர் தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
    • மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .

    தஞ்சாவூா்:

    நீட் நுழைவு தேர்வு முடிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக கூறி பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

    அந்த வகையில் இன்று நீட் தேர்வை கண்டித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள மத்திய அரசின் கலால் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜுன் தலைமையில் ஏராளமான மாணவ- மாணவிகள் திரண்டனர்.

    பின்னர் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பியவாறு கலால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர்.

    உடனே பாதுகாப்பில் இருந்த போலீசார் பேரிகார்டு கொண்டு மாணவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 21 மாணவ-மாணவிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
    • விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்க இயலாது என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆண்டு காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர், இந்த ஆண்டு தரவேண்டிய தண்ணீரை உடனடியாக தர உத்தரவிட்டும் தற்போது வரை கர்நாடக அரசு வழங்காதது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு தண்ணீர் பெற்று தர வேண்டும்.

    மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதிலேயே கர்நாடக அரசு குறியாக உள்ளது. உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 17-ந் தேதி டெல்டா மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆழ்துளை மூலம் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கான இடுபொருள், உரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் .

    தமிழக அரசு குறுவை சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் அனைவருக்கும் குறுவை தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். சாகுபடி செய்யக்கூடிய முழு பரப்பளவிற்கும் திட்டம் சென்றடையும் வகையில் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.
    • பாடப்பு த்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூா்:

    தமிழகத்தில் பள்ளி களுக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது . பின்னர் வெயிலின் தாக்கத்தால் 10-ம் தேதி ( இன்று) பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது .

    அதன்படி கோடை விடுமுறை முடிந்து 2 மாதங்களுக்குப் பிறகு இன்று (திங்கட்கிழமை) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி இன்று திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர்.

    அப்போது பள்ளி மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு முதல் நாள் சந்தோச இனிப்புடன் தொடங்கும் வகையில் அவர்களுக்கு சர்க்கரை பொங்கல், கல்கண்டு போன்றவை வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாணவர்கள் இன்முகத்தோடு சிரிப்புடன் அதை வாங்கி கொண்டு பள்ளிக்கு உள்ளே சென்றனர்.

    மேலும் 2 மாதங்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்ததால் பழைய நிகழ்வுகளை மனம் விட்டு பேசினர்.

    தொடர்ந்து 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் தொடங்கி நடைபெற்றது. முதல் நாளிலே மாணவ-மாணவிகளுக்கு தேவையான பாடப்பு த்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றை ஆர்வத்துடன் மாணவர்கள் வாங்கி படித்தனர். தொடர்ந்து இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நடந்து வருகிறது.

    • உலகளவில் 10 பேரில் ஒருவர் சுகாதாரமற்ற உணவால் நோய்வாய்ப் படுகிறார்.
    • உணவுப் பாதுகாப்பு என்பது உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.

    தஞ்சாவூர்:

    உலக உணவு பாதுகாப்பு நாளையொட்டி, தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கில் மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் கூடுதல் செயலரும், நிதி ஆலோசகருமான அசித்கோபால் பங்கேற்று பேசியதாவது:-

    உலகளவில் 10 பேரில் ஒருவர் சுகாதாரமற்ற உணவால் நோய்வாய்ப் படுகிறார். பாக்டீரியா, வைரஸ்கள், பாதிக்கப்படக் கூடிய ஒட்டுண்ணிகள் அல்லது கன உலோகங்கள் போன்ற ரசாயனப் பொருட்கள் கொண்ட அசுத்தமான உணவை சாப்பிடுவதால் 200-க்கும் அதிகமான நோய்கள் ஏற்படுகின்றன.

    நம் நாட்டு மக்கள் தொகையில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் 9 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் 40 சதவீதம் பேருக்கு பாதுகாப்பற்ற உணவு காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அவர்கள் அதிக ஆபத்துக்கு ஆளாகின்றனர்.

    உணவுப் பாதுகாப்பு என்பது உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், உணவால் பரவும் நோய்களைத் தவிர்ப்பது எப்படி என்பதையும் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். உணவு பதப்படுத்துதல், சுகாதாரத்தின் முக்கியத்துவம், பாதுகாப்பான உணவு உண்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பழைய கால நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.
    • சிறுவர், சிறுமிகளுக்கான கயிறு இழுத்தல் போட்டியும் நடந்தது.

    பட்டுக்கோட்டை:

    நமது பழமையான பள்ளிப்பருவ விளையாட்டுக்களை தற்போதுள்ள சிறுவர், சிறுமியர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாகவும், புதுப்பிக்கும் ஒரு முயற்சியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஆர்.வி. நகர் பகுதியில் கல்வியாளர்கள் ஒருங்கிணைப்புடன் சிறுவர், சிறுமியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர்.

    இதில் பரமபதம், தாயம், பல்லாங்குழி, கிச்சுகிச்சு தாம்பலம், நொண்டி, நொங்கு வண்டி ஓட்டுதல், டயர் வண்டி ஓட்டுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளையும் சிறுவர், சிறுமியர்கள் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகளுக்கான கயிறு இழுத்தல் போட்டியும் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்களும் தன்னார்வமாக நொங்கு வண்டி ஓட்டியும், டயர் வண்டி ஓட்டியும் பம்பரம் விளையாடியும் அவர்களது பழைய கால நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.

    அதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமியர்களின் பெற்றோர்களுக்கு கயிறு இழுத்தல் போட்டியும் நடந்தது. இது குறித்து சிறுமியர்கள் கூறுகையில், நாங்கள் விளையாட்டு என்றால் செல்போனிலும், டி.வியிவிலும் கேம் விளையாடிக் கொண்டிருப்போம். நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. இன்றைய தினம் பாரம்பரிய விளையாட்டுக்களை நாங்கள் மற்ற சிறுவர், சிறுமிகளுடன் இணைந்து விளையாடியது எங்களுக்கு ஜாலியாக இருக்கிறது. நாங்கள் மிகவும் சந்தோசமாக உள்ளோம்.

    அம்மா அடிக்கடி வெளியில் சென்று ஓடியாடி விளையாட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு வாய்பே இல்லாமல் இருந்தது. தற்போது நாங்கள் மற்ற சிறுவர், சிறுமிகளுடன் இணைந்து ஓடியாடி விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் இந்த அதிரடி ஆய்வால் பட்டுக்கோட்டை நகர கடை வீதிகள் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
    • ஒரு டீக்கடை ஆகிய 4 கடைகளுக்கு மொத்தம் ரூபாய் 6,000 அபராதம் விதித்ததுடன் எச்சரிக்கை நோட்டீஸ்ம் வழங்கினர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சுப்பையா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சக்திகாந்த். சமூக ஆர்வலர். இவரது மகன் ஜெய்குரு (வயது 14). அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார்.

    இந்நிலையில் ஜெய்குரு பட்டுக்கோட்டை பெரிய தெருவில் உள்ள முருகையா ஓட்டலுக்கு சாப்பாடு வாங்குவதற்காக பாத்திரங்களும் எடுத்துச் சென்று ஒரு சாப்பாடு டோக்கன் வாங்கிக் கொண்டு ஓட்டல் பார்சல் கட்டுமிடத்திற்கு சென்று சாப்பாடு கேட்டுள்ளார் .

    ஓட்டல் ஊழியர் பாத்திரத்தில் சாப்பாடு தரமாட்டோம். பிளாஸ்டிக் பைகளில் தான் தருவோம் என்று கூறினார்.

    அதற்கு சிறுவன் ஜெய்குரு பிளாஸ்டிக் பைகளில் வாங்கிச் சென்று சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று கூறியுள்ளார். உடனே ஓட்டல் கேஷியர் சிறுவனிடமிருந்து டோக்கனை திரும்பி வாங்கிக் கொண்டு சாப்பாடு தரமறுத்து சிறுவனை திருப்பி அனுப்பிவிட்டார்.

    இதையடுத்து சிறுவன் ஜெய்குரு வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தரணிகாவிடம் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும், சம்மந்தப்பட்ட ஹோட்டல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

    14 வயதுள்ள ஒரு பள்ளி மாணவன் கொடுத்த புகாரினைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை நகரம் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு பெரிய தெருவில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி, டீக்கடை, பழக்கடைகளுக்கு சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

    அப்போது பார்சல் உணவை பாத்திரத்தில் தர மறுத்த ஓட்டலுக்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஒட்டல் கேஷியரிடம் பாத்திரத்தில் சாப்பாடு கேட்டால் நீங்கள் கொடுக்க வேண்டியது தானே. பார்சலுக்கு என்ன அளவு கொடுப்பீர்களோ அந்த அளவுதானே பாத்திரத்தில் கொடுக்கப் போகிறீர்கள்.

    பாத்திரத்தில் சாப்பாடு கேட்டால் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று ஓட்டல் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தும் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து அதே தெருவில் உள்ள மற்ற ஓட்டல்களில் உள்ள சமையல் அறைக்கு சென்று ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சமையல் அறையில் பணிபுரியும் ஊழியர்கள் தலையில் கேப் அணிந்தும், கைகளில் கிளவுஸ் மாட்டிக் கொள்ள வேண்டும். தயார் செய்து வைத்துள்ள உணவுகளை எப்போதும் இலையைப் போட்டு மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து பழக்கடைகள், டீக்கடைகள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பூஞ்சானம் பிடித்து சாப்பிட தகுதியற்ற 5 கிலோ கேக்குகளை எடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டு அழித்தனர். அதேபோல் 3 கிலோ அழுகிய பழங்களையும் அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டு அழித்தனர்.

    இந்த அதிரடி ஆய்வில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஓட்டல் மற்றும் ஒரு பேக்கரி, ஒரு பழக்கடை, ஒரு டீக்கடை ஆகிய 4 கடைகளுக்கு மொத்தம் ரூபாய் 6,000 அபராதம் விதித்ததுடன் எச்சரிக்கை நோட்டீஸ்ம் வழங்கினர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் இந்த அதிரடி ஆய்வால் பட்டுக்கோட்டை நகர கடை வீதிகள் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×