என் மலர்
தென்காசி
- கணவன்-மனைவிக்கிடையே சமீபகாலமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- காதல் மனைவியை கணவரே கொன்று எரித்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடையநல்லூர்:
தென்காசி அருகே இலத்தூர் இனாவிலக்கு பகுதியில் மதுநாதபேரி குளம் அருகே நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
பெண்ணின் காலில் மெட்டி கிடந்தது. இடது கை, காலில் உள்ள 5 விரல் எரியாமல் கிடந்தது. சம்பவ இடத்தில் ஏராளமான மது பாட்டில்களும் கிடந்தன. சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. மீனாட்சி சுந்தரம் மேற்பார்வையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் இலத்தூர் முதல் இனாவிலக்கு வரை சாலையில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், முந்தைய நாள் இரவு 9.30 மணியளவில் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக கார் ஒன்று சென்றது தெரியவந்தது.
அந்த கார் பதிவு எண் மூலம் நடத்திய விசாரணையில், அந்த கார் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிவகாசி பாரதி நகரை சேர்ந்த ஜான்கில்பர்ட் என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது மனைவியை கொன்று எரித்தது தெரியவந்தது.
இவர் அதே பகுதியை சேர்ந்த கமலி (வயது 30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜான்கில்பர்ட் தனது காதலியை கரம்பிடித்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே சமீபகாலமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 9-ந்தேதி கணவன்-மனைவி இடையே நடந்த தகராறில் ஜான்கில்பர்ட் தனது மனைவியை கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை அப்புறப்படுத்துவதற்காக தனது சகோதரர் ஒருவரின் உதவியை நாடி உள்ளார். அதன்படி, மனைவியின் உடலை ஒரு காரில் ஏற்றி அங்கிருந்து சங்கரன்கோவில், திருவேங்கடம் வழியாக தென்காசி அருகே சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் காரில் கொண்டு வந்து இலத்தூர் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத குளத்தின் ஒரு பகுதியில் முட்புதருக்குள் வீசி எரித்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஜான்கில்பர்ட்டை கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த சகோதரரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் மனைவியை கணவரே கொன்று எரித்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பலத்த காயமடைந்த அணிகேட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
- உபேந்திராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர்:
டெல்லி அசோக் பிஹார் பேஸ் ஜெய்லர் லாலாபாக் பகுதியை சேர்ந்தவர் சங்கர் சரோஜ். இவரது மகன் அணிகேட் (வயது 25).
இவரது நண்பர் டெல்லி சாலிமார்பேக் லோகியா கேம் பகுதியை சேர்ந்த உபேந்திரா (24). இவர்கள் இருவரும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை அடுத்த புன்னையாபுரம் முந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரைஸ் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் வேலை செய்வதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு ரைஸ் மில் அருகே தங்கும் விடுதிக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் இரவு சமையல் செய்த போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உபேந்திரா, சமையலுக்கு காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்த கத்தியால் அணிகேட்டை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அணிகேட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சொக்கம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் உடையார்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அணிகேட்டின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் உபேந்திராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
- மாவட்ட அளவில் ஓவிய போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் அரியப்பபுரம், கணக்க நாடார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுடலைக்கனி-சத்யா தம்பதியர். சுடலைக்கனி பாவூர்சத்தி ரத்தில் கார்கள் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
இவர்களுக்கு நந்திதா என்ற மகளும், அத்திரி சித்தாத் என்ற மகனும் உள்ளனர். நந்திதா பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
3-ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஓவிய போட்டிகளில் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதனைகள் படைத்துள்ளதோடு எண்ணற்ற சான்றிதழ்களையும் வாங்கி குவித்துள்ளார்.
இவர் 1,330 திருக்குறள் வரிகளால் பென்சில் மூலம் திருவள்ளுவரின் உருவத்தை தத்ரூபமாக வரைந்து அதற்கு பார்டராக 133 அதிகாரங்களையும் எழுதி தான் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் காண்பித்து பாராட்டினை பெற்றார்.
மேலும் சட்ட மேதை அம்பேத்கார் படத்தினை அவர் இயற்றிய சட்டங்களை கொண்டு பென்சிலால் புதிய முயற்சியாக வரைந்து கொண்டிருக்கிறார்.
மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகளில் சாதனை படைத்தது மட்டு மல்லாது மாநில அளவிலான போட்டிகளிலும் வென்று சாதனை படைக்க வேண்டும் என்றும் மாணவி நந்திதா கூறினார்.
- காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
- குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட் டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றா லம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும், காலையில் மழை குறைந்துள்ள நிலையில், அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.
- சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
- குளிர்ந்த காற்றுடன் இதமான சூழ்நிலை நிலவியது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றால அருவி களில் இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் கூட்டம் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இன்று அதிகாலை முதலே குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடி குற்றால நாதர் கோவிலில் வழிபட்டனர்.
மேலும் ஐந்தருவி, பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் மிதமாக விழுவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்றுடன் இதமான சூழ்நிலை நிலவியது.
- சிறுவன் அங்கு வந்து திடீரென அம்மிக்கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுக்கொலை செய்தான்.
- விசாரணைக்கு பின்னர் சிறுவனை நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் 17 வயதான மூத்த மகனுக்கு திடீரென மனநலம் சற்று பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று சிறுவனின் தந்தை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், இரவில் சிறுவனின் 45 வயதான தாய் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது சிறுவன் அங்கு வந்து திடீரென அம்மிக்கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுக்கொலை செய்தான். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போன அந்த சிறுவன், தனது தந்தைக்கு போன் செய்து அம்மாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டுவிட்டேன். தலையில் இருந்து ரத்தம் கொட்டுகிறது என்று கூறியுள்ளான்.
உடனே பதறிப்போன அவர், தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர்களிடம் போனில் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அந்த பெண் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். அவனை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தபோது, தனது தாயை நினைத்து தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தான்.
மேலும் அங்கிருந்த போலீசாரிடம், எனது தாயை எங்கே, நான் அவரிடம் போக வேண்டும் என்று அழுதபடியே கேட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது. தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் சிறுவனை நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
- புத்தாண்டு பிறந்ததையொட்டி அதிகாலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
- ஐயப்ப பக்தர்கள் குளித்து குற்றாலநாதர் கோவிலில் வழிபட்டு சென்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்தது.
இதனால் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
மெயின் அருவியில் நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் விழும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
நேற்று காலை முதல் இரவு வரை சுற்றுலா பயணிகளுக்கு மெயின் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் குற்றாலம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்று 2025 புத்தாண்டு பிறந்ததையொட்டி அதிகாலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
மெயின் அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டதால் குற்றாலம் வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் குற்றாலநாதர் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் குளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதில் ஐயப்ப பக்தர்கள் குளித்து குற்றாலநாதர் கோவிலில் வழிபட்டு சென்றனர்.
சிறிது நேரத்தில் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சீரானது என அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் நீண்ட வரிசையில் நின்று ஐயப்ப பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் மெயின் அருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலத்தில் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் உள்ளதால் அங்கு பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் புத்தாண்டு பிறப்பையொட்டி குற்றாலநாதர் கோவில் மற்றும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், தேவாலயங்கள் என பல்வேறு வழிபாட்டுத் தலங்களிலும் காலை முதலே பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- மெயின் அருவி பகுதியில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
- சேதம் அடைந்த பாதுகாப்பு கம்பிகள் அனைத்தும் மீண்டும் அமைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு மேல் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மிதமான மழை பெய்தது.
இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து மிதமான மழை பெய்ததன் காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் இரவிலும் வனப்பகுதியில் மழை பெய்ததால் மெயின் அருவியில் தண்ணீர் பாதுகாப்பு வளைவைத் தாண்டி ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் பாதுகாப்பு கருதி இன்று காலையில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவியில் குளிப்பதற்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் மிதமான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மெயின் அருவி பகுதியில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பழைய குற்றால அருவி பகுதியை சுற்றி சேதம் அடைந்த பாதுகாப்பு கம்பிகள் அனைத்தும் மீண்டும் அமைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
- இன்று காலை முதல் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளித்து செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த 13-ந்தேதி பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பிகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தது.
இந்நிலையில் வெள்ள நீர் குறைந்த சில நாட்களிலேயே மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பழைய குற்றால அருவி பகுதியில் எவ்வித சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளாததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.
விவசாய சங்கங்கள், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் என பலரும் பழைய குற்றால அருவியில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பழைய குற்றால அருவியில் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில் அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் அருவி கரையை சுற்றி பாதுகாப்பு கம்பிகள் மீண்டும் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளித்து செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து சற்று குறைந்து சீராக விழுந்து வருவதால் அங்கும் காலை முதலே ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.
- சொத்து பிரச்சனையில் விவசாயி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆழ்வார்குறிச்சி:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி கருத்தப்புலியூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள். இவருக்கு 2 மனைவிகள். இதில் மூத்த மனைவிக்கு இருதயராஜ் (வயது47) என்ற மகன் உள்ளார்.
விவசாயியான இவருக்கும், அவரது தந்தையின் 2-வது மனைவியின் மகன்களான ஆரோக்கியராஜ், ஜெயபால் ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருதயராஜ் அப்பகுதியில் உள்ள அச்சங்குளத்தில் மீன் பிடிக்கும் குத்தகை எடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு அவர் குளப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஆரோக்கியராஜ், ஜெயபால் ஆகிய 2 பேரும் இருதயராஜுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருதயராஜை வெட்டிய தோடு அவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், டி.எஸ்.பி. ஜெயபால் பர்ணபாஸ், இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட இருதயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக டி.எஸ்.பி. ஜெயபால் பர்ணபாஸ் கூறுகையில், சொத்து பிரச்சனை காரணமாக ஆரோக்கியராஜ், ஜெயபால் ஆகிய 2 பேரும் இருதயராஜை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. 2 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
சொத்து பிரச்சனையில் விவசாயி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பழைய குற்றாலம் அருவியில் மட்டும் 8-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- குற்றாலம் பகுதி வியாபாரிகள் தற்பொழுது அருவியில் குளிக்க அனுமதி வழங்கியதை அடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் கொட்டியது. இதனால் அருவிக்கரைகள் மிகப்பெரிய அளவில் சேதங்களை சந்தித்தது.
இந்த சேதங்களானது சீர் செய்யப்பட்டு தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 6 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பழைய குற்றாலம் அருவியில் இதுவரை பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தால் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் 8-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது சீரமைப்பு பணி ஓரளவு நிறைவு பெற்றதால், நேற்று இரவு தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து, நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் காலை முதலே குற்றாலம் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி சபரிமலை நோக்கி சென்று வருகின்றனர்.
மேலும் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களை குளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த குற்றாலம் பகுதி வியாபாரிகள் தற்பொழுது அருவியில் குளிக்க அனுமதி வழங்கியதை அடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கடந்த வாரம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
- அருவிக்கரையில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீர் செய்த பிறகே குளிக்க அனுமதி.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று வரை 5 நாட்கள் இந்த தடையானது நீடித்தது.
இந்த நிலையில் தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள ஐந்தருவி மற்றும் புலியருவி ஆகிய 2 அருவிகளில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

ஆனால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடையானது இன்று 6-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக சேதாரம் அதிக அளவு காணப்பட்டு வரும் நிலையில், அருவிக்கரையில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீர் செய்த பிறகே குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.