என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் நகை பறிப்பு கண்காணிப்பு காமிராவில் பதிவான கொள்ளையன் உருவம்

- சேலம் மாவட்டம் எடப்பாடி ஆசிரியர் காலனியில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் நகையை பறித்து சென்றனர்.
- 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் நாகம்மாள் கழுத்தில் அணிதிருந்த 5½ பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றான்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி ஆசிரியர் காலனியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியை நாகம்மாள் (வயது 64). நேற்று இவர் தனது மகள் வசந்தம்மாளுடன் இருசக்கர வாகனத்தில் தாவாந்தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் படித்து வரும் தனது பேரனுக்கு மதிய உணவு கொடுக்க சென்று கொண்டிருந்தார்.
நகை பறிப்பு
அப்போது தாவாந் தெரு காளியம்மன் கோவில் முன்பு உள்ள வேகதடையில் மெதுவாக செல்லும் பொழுது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் நாகம்மாள் கழுத்தில் அணிதிருந்த 5½ பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றான்.
இதனால் நாகம்மாளின் மகள் வசந்தம்மாள் கூச்சலிட்டவாறு அந்த வாலிபரை விரட்டிச் சென்றார். ஆனால் எடப்பாடி பஸ் நிலையம் அருகே சென்றபோது அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமானார்.
சி.சி.டி.வி.யில் பதிவான கொள்ளையன் உருவம்
இது குறித்து நாகம்மாள் எடப்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தனியார் மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிளில் நீண்ட நேரமாக காத்திருந்த வாலிபர் ஒருவர் நாகம்மாள் சென்ற ஸ்கூட்டரை பார்த்து பின் தொடர்ந்து சென்று, நகையை பறித்த காட்சி பதிவாகி இருந்தது.
எடப்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா வழக்கு பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். தகவல் அறிந்த சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.