என் மலர்
உள்ளூர் செய்திகள்
பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போல பணம் பறிக்கும் கும்பல்
- 75 பேரை அப்புறப்படுத்த அமைச்சர் எ.வ.வேலு அதிரடி உத்தரவு
- கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை அனைத்து துறை அலுவலர்களும் சிறந்த முறையில் செய்து தர வேண்டும்.
காவல்துறையின் சிறந்த செயல்பாட்டால் கடந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஆன்மீக பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக அவரவர் வீடுகளுக்கு திரும்பினர்.
இது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
இந்த ஆண்டு தீப தரிசனம் காண வரும் கட்டளைதாரர்கள் மற்றும் உபய தாரர்களுக்கு முறையான அனுமதி வழங்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்புத் துறையினர் அன்னதானம் வழங்கும் இடங்களில் உணவு தட்டுகளை கிரிவலப்பாதையில் போடாமல் அதற்கென உள்ள குப்பை தொட்டியில் போட அன்னதானம் வழங்குபவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து உறுதி படுத்த வேண்டும். தண்ணீர் பாட்டில்களை உரிய விலைக்கு விற்பனை செய்வதையும் உறுதி செய்ய வேண்டும்.
சமூக வலைதளங்களில் நல்ல தகவல்களை விட உண்மைக்கு புறம்பான தகவல்கள் தான் அதிகம் பதிவிடப்படுகிறது.
அண்ணாமலையில் தீ விபத்து ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் ஆயிரம் மீட்டருக்கு கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவிற்கு முன்பு மாடவீதி முழுவதும் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைத்து தரப்படும்.
அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்ற வேண்டும். கிரிவலப்பாதை நடைபாதையில் உள்ள கடைகளை அகற்றி அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும், பக்தர்களுக்கு இடையூறு இல்லாமலும் கடை வைக்க ஒரு இடத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கித்தர வேண்டும்.
பணம் பறிக்கும் கும்பல்
நகராட்சி துறையினர் சேவை மனப்பான்மையுடன் தீபத்திருவிழா பணிகளை மேற்கொள்ள வேண்டும். கிரிவலம் வரும் பக்தர்களை இடைமறித்து ஆசீ வழங்குவதை போல் ஒரு கும்பல் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக புகார் சொல்லப்படுகிறது. ஆன்மீக பக்தர்கள் மீது விபூதி பூசுவது போல் 14 கிலோ மீட்டர் தூரத்தில் 75 க்கும் மேற்பட்டவர்கள் காவி உடையில் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இதுபோன்ற நபர்களை கிரிவலப்பாதையில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும். அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 100 சதவிகிதம் சிறப்பான முறையில் தீபத் திருவிழா நடைபெறும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டர் பா.முருகேஷ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் முரளிதரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், தொழிலாளர் நல மேம்பாட்டு பிரிவு அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், நகரமன்ற துணை தலைவர் சு.ராஜாங்கம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமணன், மாவட்ட கவுன்சிலர் இல.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.