என் மலர்
உள்ளூர் செய்திகள்
குளத்தில் தவறி விழுந்து இரவு முழுவதும் தவித்த மூதாட்டி
- பொதுமக்கள் உயிருடன் மீட்டனர்
- முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 73). அதே கிராமத்தில் பாசி படிந்து குளம் ஒன்று உள்ளது. நாகம்மாள் அந்த குளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கால் தவறி குளத்தில் விழுந்தார். இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் யாரும் வரவில்லை. இதனால் நாகம்மாள் குளத்தில் இருந்த மரக்கிளையை பிடித்து இரவு முழுவதும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் குளத்தின் அருகே சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது நாகம்மாள் குளத்தில் இருந்த காய்ந்த மரக்கிளை யை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் குளத்தில் இறங்கி மூதாட்டியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் நாகம்மாளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரவு முழுவதும் குளத்தில் இருந்த மரக்கிளையை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிய மூதாட்டியை பொதுமக்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.