என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஜெயின் கோவிலில் பூட்டை உடைத்து 7 ஐம்பொன் சிலைகள் திருட்டு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் பழமைவாய்ந்த 'பூண்டி பொன்னெழில்நாதர் ஜீனாலயம் உள்ளது.
கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
இக்கோவில் தலைவராக அப்பாண்டை ராஜ், செயலாளராக நேமிராஜன், பொருளாளராக அசோக்குமார் உள்ளனர். தினசரி கோவிலில் பூஜை முடிந்த பிறகு இரவு நடையை சாத்திவிட்டு செல்வது வழக்கம்.
அதன்படி சம்பவத்தன்று இரவு பொருளாளர் அசோக்குமார் கோவில் கதவை மூடிவிட்டு சென்றுள்ளார்.
இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அங்கிருந்த 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த 1½ அடி உயரமுள்ள அனந்ததீர்த்தங்கரர் உள்பட 7 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்றனர்.
மோப்ப நாய் தங்களை கண்டுபிடிக்காமல் இருக்க, கோவில் முழுவதும் மிளகாய் பொடியை கொள்ளையர்கள் தூவி விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் காவலாளி நேற்று காலை கோவில் நடையை திறக்க சென்றார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவில் நிர்வாகிகளுக்கும், தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
தடயங்கள் சேகரிப்பு
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் , இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் உட்பட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். திருவண்ணாமலையில் இருந்து கைரேகை நிபுணர் தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளை குறித்து கோவில் நிர்வாகிகள் புகாரின்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.