என் மலர்
உள்ளூர் செய்திகள்
கிரிவலப் பாதையில் 1 கிலோ மீட்டருக்கு ஒரு சுத்திகரிப்பு குடிநீர் தொட்டி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில், மாநில நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் கிரிவலப் பாதையில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் 8 நீர்நிலையங்கள் உள்ளன.
இவை ஒவ்வொன்றும், 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்டது. சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் பெறும் 2 நீர்நிலையங்களை தவிர, மற்றவற்றில் 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் வசதிக்கு அருகில் போர்வெல்கள் உள்ளன.
இருப்பினும், அதன் அதிக பராமரிப்பு செலவுகள் காரணமாக, நீர் நிலையங்கள் வார இறுதி நாட்கள், சித்ரா பவுர்ணமி நாட்கள் (மாதம் 2 முறை) மற்றும் ஆண்டுதோறும் மகா தீபத் திருவிழாவின் போது மட்டுமே திறக்கப்படுகிறது.
வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 1.5 லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
14 கி.மீ தொலைவு உள்ள கிரிவலபாதையில் 7 கி.மீ தொலைவிற்குள் அனைத்து நீர் நிலையங்களும் அமைந்துள்ளதால், நீர் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த நாட்களில் நிலையங்களில் உள்ள 1,000 லிட்டர் டேங்க் முழுவதும் நிரம்பிய 40 நிமிடங்களில் காலியாகிவிடுகிறது.
இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கடந்த மாதம் கோவில் சாதுக்கள் மற்றும் ஆன்மீகத் தலைவர்களுடன் உரையாடினார். அப்போது கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அதிகப்படியான அடிப்படை வசதிகள், குறிப்பாக கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
இதனையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒவ்வொரு ஒரு கி.மீ.க்கும் ஒரு சுத்திகரிப்பு நீர்நிலையம் அமைக்கப்படும்.
மேலும் பாதையில் 8 நீர்நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்துவதை குறைக்க இயலும். தற்போது, தினமும் சராசரியாக, 350 - 400 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், பாதையில் கிடக்கிறது. சேகரிக்கப்படும் கழிவுகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களாக உள்ளன.
தற்போது புதிய நீர்நிலையங்கள் அமைப்பதற்கான இடங்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது.
பக்தர்களுக்கான இதர வசதிகளுடன், கிரிவல பாதையில் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அகலப்படுத்தப்பட்ட நடைபாதையில் கான்கிரீட் தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.