என் மலர்
உள்ளூர் செய்திகள்
செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
- மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- சுகாதாரமான முறையில் பராமரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
செங்கம்:
செங்கம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமப் பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுவது மற்றும் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சைகள் உட்பட பலதரப்பட்ட மக்கள் செங்கம் அரசு மருத்து வமனைக்கு தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் செங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த பரிசோதனை ஆய்வகம் அருகே உள்ள கழிவறையிலிருந்து கழிவு நீர் வெளியேறி ஆய்வகம் வரை தேங்கியுள்ளதாக சமூக ஆர்வலர் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் ரத்த பரிசோதனை செய்ய ஆய்வகத்திற்கு வருபவர்கள் தேங்கியுள்ள கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவறையில் இருந்து கழிவு நீர் வெளியேறியதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அங்கு ஆய்வகத்தின் அருகே கழிவுநீர் தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடுகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.
மேலும் செங்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சுகாதார சீர்கேடுகள் குறித்து புகார்கள் பொதுமக்கள் கூறும் நிலையில் மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு செங்கம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து நடவடிக்கை வேண்டும்.
போதுமான துப்புரவு பணியாளர்களை கொண்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளவும், கழிவறைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் செங்கம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.