என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரம்ம குளத்தில் தீர்த்தவாரி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர்.
மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்யவும், 14 கிலோமீட்டர் கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
ஐப்பசி மாத பவுர்ணமி தினமான நேற்று வழக்கத்தைவிட கூடுதல் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலையில் குவிந்தனர்.
கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் பக்தர்கள் அடிமேல் அடிவைத்து நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் உள்ள கல்யாண சுந்த ரேஸ்வரருக்கும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
அன்னாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
நேற்றைய தினம் சந்திர கிரகணம் என்பதால் கிரகணம் நிறைவு பெற்றவுடன் இன்று அதிகாலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
விடுமுறை தினத்தில் வந்த பவுர்ணமி வந்ததால் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அருணாசலேஸ்வரரை வலம் வந்து வழிபட்டு சென்றனர்.
ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.