என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் திரைப்பட இயக்குனர் பேரரசு சாமி தரிசனம்
- தமிழ் வளர்ச்சிக்கு எந்த அரசாக இருந்தாலும் கவனம் செலுத்த வேண்டும்
- 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரியவில்லை.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திரைப்பட இயக்குநர் பேரரசு சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது;
தமிழ் வளர்ச்சி என்பது தமிழகத்தில் குறைவாக உள்ளது. தமிழ் வளர்ச்சிக்கு எந்த அரசாக இருந்தாலும் கவனம் செலுத்த வேண்டும். 12 வயது சிறுவர்கள் தமிழ் மொழியில் பேசுகிறார்களே தவிர, எழுதவும் மற்றும் படிக்கவும் தெரியவதில்லை.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக இருந்தால்தான் தமிழ் காப்பாற்றப்படும். 60 சதவீதம் பேச்சு மொழியாகத்தான் தமிழ் மொழி உள்ளது என கூறலாம். இதுவும், எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடக் கூடாது. தமிழ் மொழியை பாதுகாக்க, நாம் கவனமாக இருக்க வேண்டும். தமிழ் அழியாது என இருந்துவிடக்கூடாது. 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழியில் எழுத படிக்க தெரியவில்லை.
தமிழ் மொழியை பாதுகாக்க அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. பெற்றோரும் துணையாக இருக்க வேண்டும். விருப்ப பாடம் என்பதால், இந்தியை தேர்வு செய்து பிள்ளைகளை படிக்க சொல்கிறார்கள்.
விருப்பப் பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்யவில்லை. பெற்றோர்தான் நிர்ணயம் செய்கின்றனர். வீட்டில் பிள்ளைகள் தமிழில் பேசுவதால், இந்தி மொழியை தேர்ந்தெடுப்பதாக கூறுகின்றனர். வீட்டில் பிள்ளைகள் தமிழில் பேசுகின்றனர், எழுத படிக்க தெரியவில்லை. அதேநேரத்தில் இந்தி மொழியை விருப்பப் பாடமாக படித்த மாணவர்கள், இந்தி மொழியில் பேசுகின்றனர், எழுதுகின்றனர், படிக்கின்றனர். இது மிகப்பெரிய ஆபத்து தமிழராக இருக்கும் நாம், நமது பிள்ளைகளை தமிழில் எழுதவும், பேசவும், படிக்கவும், கற்று கொடுக்க வேண்டும். தமிழகத்தில் இரு மொழி கொள்கை சரியானதுதான்.
தமிழை கற்றுக் கொண்ட பிறகு இந்தி மொழிக்கு செல்ல வேண்டும். இந்தி மொழிக்கு எதிர்ப்பு மற்றும் இந்தி ஒழிக என்பதால் தமிழ் வளர்ந்துவிடாது.
தமிழ் மொழியை வளர்ப்பது வேறு, இந்தியை புறக்கணிப்பது வேறு. இந்தியை புறக்கணிப்பதால் தமிழ் வளர்ந்து விடாது. தமிழ் வளர்ச்சிக்கு சிந்தித்து செயல்பட வேண்டும். தமிழ் மொழி அழியக் கூடாது, வளர்ச்சி பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.