என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க 7 ஏக்கர் நிலம் தேர்வு
- நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
- அரசின் முழு மானியமாக ஒதுக்கீடு செய்ய அனுமதி.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் புதிய பஸ் பஸ் நிலையம் அமைப்பதற்காக சுமார் 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு நகரமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
திருவண்ணாமலை நகர மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்றத் தலைவர் நிர்மலாவேல்மாறன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
திருவண்ணாமலை நகராட்சியில் ஈசான்யம் பகுதியில் உள்ள உரங்கிடங்களில் உள்ள குப்பைகளை அகற்ற மறு கணக்கெடுப்பு செய்யும் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு வார்டுகளில் மழை நீர் வடிகால்வாய், தார் சாலை, குடிநீர் வசதி, சிமெண்டு சாலையுடன் பக்க கால்வாய் அமைத்தல், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யும் பணி செய்வது.
திருவண்ணாமலை நகராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைத்திட வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கு டான்காப் நிறுவனத்திற்கு சொந்தமான 6.83 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.
டான்காப் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.3 கோடியே 99 லட்சம் நகராட்சி மூலம் வழங்க போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் வேளாண்மை உற்பத்தி இயக்குனர் கோரிய பணத்தை அரசின் முழு மானியமாக ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கப்பட்டது.
புதிய பஸ் நிலையம் அமைத்திட திட்ட அறிக்கை தயாரித்திட ஏதுவாக மண் பரிசோதனை செய்திட வேண்டியுள்ளது. அனுபவம் வாய்ந்த தனியார் ஏஜென்சியை நியமித்து பணிகளை செய்திட அனுமதிக்கப்பட்டது.
ஆனைக்கட்டித் தெருவில் அமைந்து உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள காரணத்தினால் கூடுதல் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவது.
நகராட்சியின் உலகலாப்பாடி தலைமை நீரேற்று நிலைத்திலிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு ராதாபுரம் காட்டி உள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட்டு நகரில் அண்ணா நகர் நீர் உந்து நிலையங்கள் வழியாக நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த இடங்களில் மோட்டார் இயக்கத்தின் தன்மை மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நகராட்சி பொறியாளர் அறையில் மானிட்டர் அமைத்திட அனுமதி அளிக்கப்படுவது என்பன உள்ளிட்ட 88 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் நீலேஸ்வரர், மேலாளர் ஸ்ரீபிரகாஷ், நகர்நல அலுவலர் மோகன், உதவி பொறியாளர்கள் ரவி, ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர்கள் கார்த்திகேயன், செல்வகுமார் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.