என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் ஜெயிலில் அடைப்பு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் ஜெயிலில் அடைப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/05/26/1887765-.webp)
ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் ஜெயிலில் அடைப்பு
வெம்பாக்கம்,
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த ஆலந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் சக்திவேல். இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
ரூ.2 ஆயிரம் லஞ்சம்
இவர் ஆலந்தாங்கல் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் சில மாதங்களாக புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டின் மேல்பகுதி வழியாக மின் கம்பி செல்கிறது.
அதனால் கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டிடப் பணியை நிறுத்தி வைத்துள்ளார். வீட்டின் மேல்பகுதியில் செல்லும் மின் கம்பி பாதையை மாற்றி அமைக்க, சக்திவேல் வெம்பாக்கம் மின்வாரிய உதவி பொறியாளர் அஜித்பிரசாத்தை தொடர்பு கொண்டார்.
அப்போது திட்ட மதிப்பீடு தொகை ரூ.37 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று உதவி பொறியாளர் கூறிஉள்ளார்.
அதன்படி சக்திவேல் மின்வாரியம் பெயரில் ரூ.37 ஆயிரத்துக்கான தொகையை டி.டி.யாக எடுத்துக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் உதவிப் பொறியாளர் மற்றும் தொழிலாளர்கள் 10 பேர் வீட்டின் மீது செல்லும் மின் பாதையை மாற்றி அமைக்க சென்றனர். அப்போது மீண்டும் ரூ.2 ஆயிரம் பணம் கேட்டனர்.
சக்திவேல் பணம் தர மறுக்கவே, மின்வாரிய அதிகாரி வேலையை தொடர்ந்து செய்ய மறுத்தார்.
இதனால் மனமுடைந்த சக்திவேல், உதவிப் பொறியாளர் அஜித் பிரசாத் மீது திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையிலான போலீசார் நேற்று ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சக்திவேலிடம்கொடுத்து, அதை உதவி பொறியாளர் அஜித்பிரசாத்திடம் கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.
ஜெயிலில் அடைப்பு
அதன்படி அவரிடம் பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவிப்பொறியாளர் அஜித் பிரசாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
போலீசார் விசாரணையை தொடர்ந்து மின்வாரிய உதவிப் பொறியாளர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.