என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் கழிவுகளை மான்கள் உண்ணுவதை படத்தில் காணலாம்.
கிரிவலப்பாதை வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள்

- பிளாஸ்டிக் கழிவை சாப்பிடும் விலங்குகளுக்கு ஆபத்து
- தண்ணீர் வசதி அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப்பாதை வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை மான்கள் உண்பதால் சமூக ஆர்வலர்கள் வேதனையாக தெரிவித்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள், குரங்குகள், காட்டு பன்றிகள், மயில்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
வன விலங்குகள் கிரிவலப்பாதையில் மக்கள் நடமாடும் பகுதிக்குள் வராத வகையில் கிரிவலப்பாதையில் வனப்பகுதியை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இரும்பு வேலியின் அருகில் மான்கள் கூட்டம், கூட்டமாக வந்து பகல் நேரங்களில் வந்து நிற்கின்றன.
கிரிவலப்பாதையில் செல்பவர்களில் பெரும்பாலானோர் மான்கள் கூட்டத்தை கண்டதும் இயற்கைக்கு மாறாக அவற்றிற்கு உணவு வழங்குவதாக கையில் இருக்கும் பழங்கள், ரஸ்க், பன் உள்ளிட்ட தின்பண்ட பொருட்களை மான்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இதனால் சுயமாக வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள், பழங்களை உண்டு வந்த மான்கள் தற்போது மக்கள் வழங்கும் உணவு பொருட்களுக்காக இரும்பு வேலியின் அருகில் வந்து நிற்கின்றன.
மக்கள் உணவு அளித்து பழகியதால் மான்களும் மக்களை கண்டு எந்தவித அச்சமும் இல்லாமல் மக்கள் ஏதாவது வாங்கி போடுவார்களா என்று பார்க்கின்றன. பொதுமக்களும் தற்போது மான்களும் உணவு வழங்குதாக நினைத்து பிளாஸ்டிக் கவரில் உள்ள உணவு பொருட்கள், பாக்கு மாட்டை தட்டுகளில் வைத்து உணவு பொருட்களை போடுகின்றனர்.
மேலும் சிலர் கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்கிவிட்டு அங்குள்ள தேவையற்ற கழிவுகளை வனப்பகுதியில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் மான்கள் பிளாஸ்டிக் கழிவுகள், காகிதம் போன்றவற்றை சாப்பிடுகின்றன.
வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பகல் நேரங்களில் கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டு மக்கள் வன விலங்குகளுக்கு தேவையற்ற உணவு பொருட்களை வழங்குவதை தடுக்க வேண்டும்.
மான் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தேவையான பழ வகை செடிகள் அதிகளவில் கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் வளர்க்க வேண்டும். தண்ணீர் வசதி அமைத்து தர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.