என் மலர்
திருவண்ணாமலை
- கிராமத்தில் முக்கிய வீதி வழியாக வலம் வந்த தேரினை பக்தர்கள் தீப ஆராதனை காண்பித்து தரிசனம் செய்தனர்.
- சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவண்ணாமலை கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
காலை முதலே அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் பிற்பகலில் தேரோட்டம் நடைபெற்றது சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
கிராமத்தில் முக்கிய வீதி வழியாக வலம் வந்த தேரினை பக்தர்கள் தீப ஆராதனை காண்பித்து தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம், வில்வாரணி, மேலாரணி, போளூர், புதுப்பாளையம், செங்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- லாரி ஓட்டுநர் புறவழி சாலையில் இருந்து லாரி எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் புறவழி சாலையில் சேத்துப்பட்டு நெல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து நெல் ஏற்றிக்கொண்டு போளூர் நோக்கி வந்த லாரியும், போளூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கிச் சென்ற தடம் எண் 148 என்ற அரசு பேருந்தும் வளைவில் திரும்பும் போது எதிரே வந்த லாரியில் இடித்து நின்றது, இதில் பேருந்தில் வலது புற கண்ணாடியும், லாரியின் வலதுபுற கண்ணாடியும் ஒன்றோடு ஒன்று மோதி இடித்து சேதம் அடைந்த நிலையில் நின்றது, இதில் ஆத்திரம் அடைந்த லாரி ஓட்டுநர் புறவழி சாலையில் இருந்து லாரி எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போளூர் போலீசார் லாரி ஓட்டுனரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் லாரி ஓட்டுநர் லாரி எடுக்க மறுத்துவிட்டார். மேலும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளும் எடுத்துக் கூறியும் லாரி ஓட்டுநர் லாரி எடுக்க மறுத்து பைபாஸ் சாலையிலேயே நிறுத்தினார். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் காவலர்களின் அறிவுரை ஏற்று லாரி ஓட்டுநர், அரசு பேருந்து ஓட்டுனர் மீது புகார் செய்ய காவல் நிலையம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா நடைபெற்றது .
- துரியோதனன் வேடமணிந்து படுகள நிகழ்வை சிறப்பாக செய்து காண்பித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா நடைபெற்றது .
125 அடியில் அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் படுகளம் அருகே நாடக கலைஞர்கள் பீமன் மற்றும் துரியோதனன் வேடமணிந்து படுகள நிகழ்வை சிறப்பாக செய்து காண்பித்தனர்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை காண கீழ்பாலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு துரியோதனன் படுகளத்தை கண்டுகளித்தது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- காரின் பின்புறம் மூட்டை மூட்டையாக சில்வர் டிபன் பாக்ஸ்கள் நூற்றுக்கணக்கில் இருந்துள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த நெடுங்குணம் பகுதியில் அமைந்துள்ள போளூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேளாண் அலுவலர் வசந்த் குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையிலிருந்து போளூரை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது அதனை நிறுத்தி சோதனையில் ஈடுபடும் பொழுது காருக்குள் இருந்த பொருட்களால் தேர்தல் பறக்கும் படையினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரின் பின்புறம் மூட்டை மூட்டையாக சில்வர் டிபன் பாக்ஸ்கள் நூற்றுக்கணக்கில் இருந்துள்ளன இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்தல் பறக்கும் படையினர் இது குறித்து விசாரித்துள்ளனர் காரில் பயணம் செய்தவர்கள் தங்கள் குடும்பத்தில் மஞ்சள் நீராட்டு விழா எனவும் அவற்றிற்கு வருபவர்களுக்கு பரிசு அளிக்க சென்னையிலிருந்து குறைந்த விலையில் வாங்கி வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் அதற்கு உண்டான ரசீதையும் தேர்தல் பறக்கும் படையினரிடம் காண்பித்தனர்.
இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
இந்நிகழ்வின் போது காவலர்கள் வேண்டா, சரவணன், சிவா, ஒளிப்பதிவாளர் சேட்டு உள்ளிட்டோர் இருந்தனர்.
- இறந்தவர்களின் ஆன்மா சுற்றி திரிவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
- பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலையில் அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த குழந்தை, பெண்கள் உட்பட 7 பேர் இறந்தனர்.
இதை தொடர்ந்து அதே பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடந்த 23-ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
மேலும் இந்த பகுதியில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளால் 20-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி விட்டனர்.
விபத்து நடந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான விவசாய பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பண்ணை செயல்படவில்லை.
சாலையின் இருபுறமும் அடர்ந்த தைலம் மரங்கள் கருவேல மரங்கள், காட்டு மரங்கள் அதிகமாக உள்ளன. அதனால் மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் பலியான பகுதியில் இறந்தவர்களின் ஆன்மா சுற்றி திரிவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதியில் திடீரென சுழல் காற்று வீசுகிறது. அலறல் சத்தம் கேட்கிறது. சாலையின் குறுக்கே வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் மர்ம உருவம் நடமாடுவது போல அமானுஷ்ய சக்திகள் நடமாட்டம் உள்ளது என அந்த பகுதி மக்களிடையே தகவல் பரவியது.
இதனால் பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அவ்வழியாக செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
இந்த பேய் பீதி நாளுக்கு நாள் அங்குள்ள மக்களை முடங்க செய்து வருகிறது. இதனால் வீடுகளின் முன்பு வேப்பிலை கட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். விபத்தில் உயிர் சேதம் நடைபெறாமல் இருக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பம்பை மேளத்துடன் கோவிலில் இருந்து சாமி ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.
விபத்து நடந்த சாலையின் குறுக்கே மஞ்சள், குங்குமம், விபூதி, கற்பூரம் ஏற்றி பூசணிக்காய் உடைத்தனர். மேலும் கோழி பலி கொடுத்து வழிபாடு செய்தனர்.
- மார்ச் 9ஆம் தேதி தொடங்கிய விழா வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் சித்தேரி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் ரத உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.
மார்ச் 9ஆம் தேதி தொடங்கிய விழா வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறுகிறது இந்நிலையில் இன்று பங்குனி ஐந்தாம் நாள் ரத உற்சவ தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட பூங்காவனத்தம்மன் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்நிகழ்வை காண போளூர், கேளூர், துறிஞ்சிகுப்பம், சந்தவாசல், தேப்பனந்தல் அணைப்பேட்டை விளக்கனந்தல், கஸ்தம்பாடி, சமத்துவபுரம், கட்டிப்பூண்டி, ஆத்துவம்பாடி பால்வார்த்து வென்றான் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- வேளாண்மை அலுவலர் வசந்த் குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- பேண்ட், சுடிதார், புடவை உள்ளிட்ட புது துணிகளை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் சமத்துவபுரம் அருகே சித்தூர் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேளாண்மை அலுவலர் வசந்த் குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது உடனே அவற்றை மடக்கி சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தினுள் இருந்த பெட்டி பெட்டியான புது துணிகளால் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக காரை முழுவதுமாக சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர் சுமார் 20,000 ஆயிரம் மதிப்பிலான ஜீன்ஸ் பேண்ட், சுடிதார், புடவை உள்ளிட்ட புது துணிகளை பறிமுதல் செய்தனர்.
உடனடியாக காரில் பயணித்த வாலிபர்கள் நாங்கள் புதுத் துணியை துணிக்கடைகளுக்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளோம் என தேர்தல் பறக்கும் படையினரிடம் தெரிவித்தார் இருந்தபோதிலும் சோதனைக்கு பின் குஜராத் வாலிபர்கள் புது துணிகளை கொண்டு செல்லும் ஆவணங்களை குஜராத்தில் இருந்து வாட்ஸ் அப் மூலம் பில்களை காண்பித்த பிறகு அவற்றை சோதனை செய்த அதிகாரிகள் காரில் இருந்த வாலிபர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- பெரியாண்டவர், பெரியாயி மயான கொள்ளை நிறைவு விழா.
- சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் பெரியாண்டவர், பெரியாயி மயான கொள்ளை நிறைவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அங்காள பரமேஸ்வரி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அமர்ந்து மாடவீதி, குளத்து தெரு, புதிய தெரு உள்ளிட்ட கிராமத்தில் முக்கிய வீதியின் வழியாக உலா வந்தது. இறுதியாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியாயி சிலையை வலம் வந்து பக்தர்கள் கொண்டு வந்த காய்கனிகள், தானியங்கள் மற்றும் பொறிகளை சூறையாடி பெரியாயி சிலையை சுற்றி இறைத்து ஆக்ரோஷமாக பக்தர்கள் அரிவாளுடன் வலம் வருவர்.
மேலும் வேண்டுதல் உள்ள பக்தர்கள் பெரியாண்டவர், பெரியாயி உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.
இந்நிகழ்வைக் காண போளூர், சேத்துப்பட்டு, அவனியாபுரம், கொழப்பலூர், பெரணமல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாட்டில் இருந்து பல பகுதிகளில் இருந்தும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வந்தனர்.
- 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அடுத்த நாயுடு மங்கலத்தில் பாட்டாளி மக்கள் சார்பில் கடந்த 1989-ம் ஆண்டு அக்னி கலசம் வைக்கப்பட்டது. இந்த கலசத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பஸ் நிலையம் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தால் அக்னி கலசம் அகற்றப்பட்டது.
இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பஸ் நிலைய கட்டுமான பணி நிறைவு பெற்றவுடன் மீண்டும் அதே இடத்தில் அக்னி குண்டம் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் சொன்னபடி அக்னி குண்டம் அமைக்கப்படாததால் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் அக்னி குண்டம் அமைக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தால் அக்னி குண்டம் அகற்றப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏந்தல் பக்தவச்சலம் தலைமையில் 2-வது முறையாக புதிய அக்னி குண்டம் அமைக்கப்பட்டது.
இதை வருவாய் துறை மற்றும் போலீசார் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி தலைமையில் இன்று காலை திருவண்ணாமலை அண்ணா நுழைவுவாயில் அருகில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் பேரணியாக நாயுடுமங்கலம் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் இருந்து பல பகுதிகளில் இருந்தும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வந்தனர். இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இந்த பேரணியால் திருவண்ணாமலை முதல் நாயுடுமங்கலம் வரை உள்ள பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியது.
- கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் உள்ளிட்ட கோவில்களில் கிரிவல பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.
- கிரிவலப்பாதையில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேற்று இரவு முழுவதும் அருணாசலேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவில் கருவறையின் மேற்கு திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு நள்ளிரவு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
இதனை தொடர்ந்து தாழம்பூ சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல லட்சம் பக்தர்கள் ஓம் நமசிவாய எனும் சிவ மந்திரத்தை உச்சரித்தவாரே பக்தி பரவசத்துடன் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்து வணங்கினர்.
கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் உள்ளிட்ட கோவில்களில் கிரிவல பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.
கிரிவலப்பாதையில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒரே இரவில் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்ததால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தெருக்களிலும், சாலையோரங்களில் 4 சக்கர வாகனத்தை நிறுத்தி சென்ற வெளியூர் பக்தர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களால் சில இடங்களில் போக்குவரத்து தடையும் ஏற்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய மைதானத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 12 மணி நேர சிவராத்திரி விழாவை உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி கிரிவலம் வந்த பக்தர்களும் கண்டு ரசித்தனர்.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நகர் முழுவதும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- பலகை கல்லில் ஐயனார் சிற்பம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர்.
- ஐயனார் சிற்பம் ஏராளமான சிற்ப தொகுப்புகளுடன் தனித்துவமானதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது உளுந்தூர்பேட்டை வட்டத்துக்குட்பட்ட குணமங்கலம் ஊரின் ஏரிக்கரையில் பலகை கல்லில் ஐயனார் சிற்பம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர்.
சுமார் 3 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக ஐயனார் வடிக்கப்பட்டுள்ளது. தலையின் உச்சியில் குமிழுடன் கூடிய கரண்ட மகுடம் அலங்கரிக்க, நீளமான காதுகளில் பத்ர குண்டலமும், வட்டமான முகத்தில் மீசையுடன் கழுத்தில் பட்டையான சரப்பளியை அணிகலனாக அணிந்து காட்சி தரும் ஐயனார், உத்குதிகாசனத்தில் பீடத்தின் மீது அமர்ந்து தனது இடது கையை பீடத்தின் மீது ஊன்றியும், வலது கையை காலின் மீது வைத்து தொங்கவிட்ட நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
தோளிலிருந்து வலது காலைச் சுற்றி யோக பட்டையுடன், இடையாடை உடுத்தி அதில் குறுவாள் ஒன்றைச் சொருகி அமர்ந்துள்ள ஐயனாரின் கால்களின் அருகே ஆடும், நாயும் காட்டப்பட்டுள்ளது. மேலும் வலது காலருகே ஒரு நீர் குடுவையும், நாயின் அருகே ஒரு நீர் குடுவையும் காட்சிப் படுத்தபட்டுள்ள நிலையில், இடது தொடை அருகே சேவல் ஒன்று காட்டப்பட்டுள்ளது.
ஐயனாரின் மேற்புற வலது பக்கத்தில் குதிரையும் இடது பக்கத்தில் சாமரம் வீசும் பணிப் பெண்ணும், அதன் அருகே மிகவும் சிதைந்து நிலையில் வணங்கிய நிலையில் ஒரு உருவமும் காட்டப்பட்டுள்ளது.
இதுவரை விழுப்புரம் பகுதியை ஒட்டி ஏராளமான பல்லவர் கால ஐயனார் சிற்பங்கள் ஆவணம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஐயனார் சிற்பம் ஏராளமான சிற்ப தொகுப்புகளுடன் தனித்துவமானதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆடை , அணிகலன் மற்றும் சிற்ப அமைதியை வைத்து இது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால ஐயனார் என்பது உறுதியாகிறது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இச்சிற்பம் இன்றும் வழிபாட்டில் சிறப்புடன் இருந்து வருகிறது.
- தீயணைப்பு துறையினர் உதவியுடன், இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.
வேங்கிக்கால்:
ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர் காரில் இன்று அதிகாலை திருவண்ணாமலை நோக்கி வந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி புதூர் அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலுமாக நொறுங்கியது. அதில் இருந்த 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடிவந்தனர். படுகாயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தீயணைப்பு துறையினர் உதவியுடன், இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.
விபத்தில் பலியான 4 பேரும் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள். அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால், ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். சாலை நடுவில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கார் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.