search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சம்புவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகு (வயது 48). பட்டு நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் ஆரணி தனியார் வங்கிக்கு பைக்கில் சென்றார்.

    வங்கியில் இருந்து தனது கணக்கில் உள்ள ரூ.5 லட்சத்தை எடுத்தார். ஆரணி டவுன் பெரியகடை வீதியில் உள்ள நகைகடைக்கு சென்று தன் பெயரில் வைத்துள்ள நகைகளை மீட்பதற்காக சென்றார்.

    இதனால் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மீதி தொகையான ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்தை பைக்கில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு நகை கடையின் உள்ளே சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பைக்கின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்தை திருடி சென்றனர்.

    பின்னர் வெளியே வந்த ரகு வீட்டிற்கு செல்வதற்காக பைக்கை எடுக்க முயன்றார். அப்போது பைக்கின் பெட்டி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து ரகு ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் மர்ம கும்பல் பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    அதிக நடமாட்டம் உள்ள ஆரணி டவுன் பகுதியில் பட்டப்பகலில் பைக்கின் பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர்.
    • அமர்வு தரிசனம், சிறப்புதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 23-ந்தேதி மாலை 4.22 மணிக்கு தொடங்கி, 24-ந் தேதி மாலை 6.18 மணிக்கு நிறைவடைகிறது.

    எனவே, 23-ந்தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித் துள்ளது. இதையொட்டி, கோவிலில் பக்தர்கள் விரை வாக தரிசனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அமர்வு தரிசனம், சிறப்புதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.
    • பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணகுருக்கை மேல் நாச்சிப்பட்டு பகுதியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.

    இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, வரவு செலவு சம்பந்தமாக இரு தரப்பினரிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக உண்டியல் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் திருவிழாவும் நடத்தப்படவில்லை. கோவில் மட்டும் தொடர்ந்து கிராம மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் செங்கம் தாசில்தார் முருகன் தலைமையில், பாச்சல் போலீசார் முன்னிலையில் சமரச பேச்சு வார்த்தை கூட்டம் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. அதில் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மீண்டும் கோவில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

    7 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாததால் அதிலிருந்த பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் மக்கி நிறம் மாறியதோடு கிழிந்திருந்தது.

    மேலும் 2016-ம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், சமீபத்தில் செல்லாததாக அறிவித்து மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் சில இருந்ததாகவும் தெரிகிறது. இந்த பழைய ரூபாய் நோட்டுகளை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உண்டியலில் இருந்து சேதமடையாமல் இருந்த புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறைகள் மட்டுமே எண்ணப்பட்டது.

    மேலும், பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    7 ஆண்டுகளாக இருதரப்பு பிரச்சினையால் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் அதிலிருந்த பணம் வீணானது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

    • அயோத்தியில் 3200 ராமர் கோவில்கள் இருக்கிறது. இன்றைக்கு மோடி கட்டி உள்ளது 3201-வது கோவில் அவ்வளவு தான்.
    • பாபர் மசூதி இருந்த இடத்திற்கு 3 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகி இல்ல திருமண விழாவில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.

    பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் பொருளாதாரம் எங்கே வளர்ந்து இருக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருகிறேன் என்று சொன்னார்கள் வேலை தந்தார்களா?

    விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக ஆக்குகிறேன் என்று சொன்னார்கள் செய்தார்களா, பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு கருப்பு பணம் மீட்கப்பட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 15 லட்ச ரூபாய் போடப்படும் என்று சொன்னார்கள் போட்டார்களா, கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்தார்களா, அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய தொழிற்சாலைகள் வந்துள்ளதா, எந்த வகையில் இந்தியாவின் பொருளாதார முன்னேறி இருக்கின்றது.

    மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் மூலமாக 15 கோடி குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து வெளியே கொண்டு வந்தார். அதனை ஐ.நா. மன்றம் பாராட்டி சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

    உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோலையும், டீசலையும் விற்பது மோடி அரசாங்கம் தான். அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவினுடைய பொருளாதாரம் சீரழிந்து உள்ளது.

    அதனால் தான் அவர்கள் மற்றதை பேசுவதை விட்டுவிட்டு ராமர் கோவில் கையில் எடுத்துள்ளனர். ராமருக்கு கோவில் கட்டக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. எல்லாருமே ராமருடைய பக்தர்கள் தான்.

    வட இந்தியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் கூட ராமர் கோவிலை கட்டுங்கள் என்று தான் சொல்கிறார்கள். மசூதியை இடித்து விட்டு ராமருக்கு என்று தனியாக கோவில் கட்ட வேண்டாம் என்று தான் அன்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. கட்சிகள் சொன்னது. அயோத்தியில் 3200 ராமர் கோவில்கள் இருக்கிறது. இன்றைக்கு மோடி கட்டி உள்ளது 3201-வது கோவில் அவ்வளவு தான்.

    பாபர் மசூதி இருந்த இடத்திற்கு 3 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ஏன் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

    மக்களை திசை திருப்புவதற்காக எல்லாவற்றிலும் பொய் சொல்கின்றனர்.

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு எல்லா இடத்திலும் ஏராளமான மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். கோவில் கட்டுவதால் இன்றைக்கு தேர்தலில் யாரும் ஜெயித்து விட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலை அமைப்பதற்கு வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி இல்லை என போலீசார் உதவியுடன் சிலையை அகற்றினர்.
    • அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் கவனத்திற்கு மீண்டும் அம்பேத்கர் சிலை அமைக்கும் வரை பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறியுள்ளனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தோக்கவாடி கிராமத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது.

    இந்த சிலை அமைப்பதற்கு வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி இல்லை என போலீசார் உதவியுடன் சிலையை அகற்றினர். அதனை செங்கம் பேரூராட்சி வளாகத்தில் பாதுகாப்புடன் வைத்தனர்.

    இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கேட்டும் இதுவரை அனுமதி கிடைக்காததால் அப்பகுதி மக்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக பதாகை வைத்துள்ளனர்.

    அதில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் கவனத்திற்கு மீண்டும் அம்பேத்கர் சிலை அமைக்கும் வரை பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறியுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 10.06 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 11.22 மணிக்கு நிறைவடைகிறது.

    கிரிவலத்தையொட்டி தமிழகம் மட்டும் இன்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கினர்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

    கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிலோ மீட்டர் தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோவில், இடுக்குப் பிள்ளையார் கோவில்களை வழிபட்டு கிரிவலம் சென்றனர்.

    தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஆகியவை நேற்றும், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பொது தரிசனம் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், கிரிவல பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது.


    எனவே, அருணாசலேஸ்வரர் கோவில் வெளி பிரகாரம் வரை பக்தர்கள் தரிசன வரிசையில் காத்திருந்தனர்.

    தொடர்ந்து இன்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

    திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, தைப்பூச நட்சத்திரம் இன்று காலை 9.14 மணிக்கு தொடங்கியது.

    எனவே, கிரிவலப் பாதை யில் உள்ள ஈசான்ய குளத்தில் இன்று காலை தீர்த்தவாரி நடந்தது.

    இதைத் தொடர்ந்து, தவில், நாதஸ்வரம் இசை முழங்க ஈசான்ய குளக்கரையில் அண்ணாமலையார் எழுந்தருளினார். வரும் மாசி மகத்தன்று, பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் வல்லாள மகாராஜாவுக்கு நடைபெறும் திதி மற்றும் தீர்த்தவாரியில் சந்திரசேகரர் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.

    • உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் தாராகவுரி இறந்தார்.
    • நாய் எஜமானியை பிரிய முடியாமல் பாசத்துடன் உடலை சுற்றி சுற்றி வந்த காட்சிகள் காண்போரை கண் கலங்க வைத்தது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிம்ம தீர்த்தம் பகுதியில் வசித்து வந்தவர் தாராகவுரி (வயது 85).

    பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர் சுதந்திரத்திற்கு பிறகு குஜராத் மாநிலத்தில் குடியேறினார். பின்னர் மும்பையில் ஆசிரியையாக பணியாற்றினார். திருமணமாகாத இவர் சில ஆண்டுகள் சென்னையில் வசித்து வந்தார்.

    வயது முதிர்வு காரணமாக தனித்து வசிக்க இயலாத நிலையில், திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி இருந்தார்.

    இவர் தனிமையில் இருந்ததால் தனது பாதுகாப்பிற்காக நோபு என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்தார். தினமும் அதற்கு உணவு வைத்து அதனுடன் விளையாடி வந்தார்.

    இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் தாராகவுரி இறந்தார். தனது எஜமானி இறந்ததை அறியாமல் அந்த நாய் சுற்றி சுற்றி வந்து மூதாட்டியின் உடல் மீது படுத்துக்கொண்டு அவரை எழுப்ப முயன்றது.

    அவரது உடலை அடக்கம் செய்ய யாரும் இல்லாததால் சமூக சேவகர் மணிமாறன் உதவியை நாடினர். இதையடுத்து சமூக சேவகர் மணிமாறன் தாராகவுரியின் உறவினர்கள் தெரிவித்த சம்பிரதாயங்களின் அடிப்படையில் சடங்குகளை செய்தார்.

    தகனம் செய்ய கொண்டு செல்ல முயன்ற போது நாய் உடலை எடுக்க விடவில்லை. பின்னர் வாகனத்தில் உடலை ஏற்றியபோது அந்த வாகனத்தில் நாயும் ஏறிக்கொண்டது. அப்போதும் அந்த பெண்ணின் உடல் அருகே நின்று வாலை ஆட்டிக் கொண்டே தவித்தது.

    மேலும் சுடுகாடு வரை உடன் வந்த வளர்ப்பு நாய் இறுதிச் சடங்குகள் முடியும் வரை அங்கேயே பரிதவிப்புடன் இருந்தது. இதையடுத்து மூதாட்டியின் உடல் கிரிவலப் பாதையில் உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    நாய் எஜமானியை பிரிய முடியாமல் பாசத்துடன் உடலை சுற்றி சுற்றி வந்த காட்சிகள் காண்போரை கண் கலங்க வைத்தது.

    மூதாட்டியின் உறவினர்கள் நாயை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    • திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலம்.
    • நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி ரோகிணி நட்சத்திர நாளில் கும்பாபிஷேகம் நடந்தது.

    ஆகம விதிகளின்படி தமிழ் மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததோ அதே மாதம் அதே நட்சத்திர நாளில் வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தை மாதம் ரோகிணி நட்சத்திரம் நேற்று வந்தது.

    அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 7 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது.

     விழாவை முன்னிட்டு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து நேற்று காலை யாக பூஜை நடந்தது. பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டு இருந்த புனிதநீரை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் பிரகாரத்திற்குள் ஊர்வலமாக கொண்டு சென்று அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை சுமார் 6 மணிக்கு மேல் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது.

    • சூரியன் பயணம் செய்யும் காலம் உத்தராயண புண்ணிய காலம்.
    • உத்தராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவண்ணாமலை:

    சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூரியன் பயணம் செய்யும் காலம் உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலம் சிவாலயங்களில் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், உத்தராயண புண்ணியகால உற்சவம், தட்சிணாயண புண்ணிய கால உற்சவம் ஆகியவற்றின் தொடக்கமாக சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி உத்தராயண புண்ணியகால உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

     விழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து விநாயகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி சன்னதியில் இருந்து மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க காலை 6.18 மணியளவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்திகோஷங்கள் எழுப்பினர்.

    இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். தினமும் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர் மாட வீதிஉலா நடக்கும். விழாவின் நிறைவு நாளான வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற திருவூடல் உற்சவமும், 17-ந்தேதி (புதன்கிழமை) மறுவூடல் உற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ராஜகோபுரம் வழியாக மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பக்தர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்து அனுப்பினர்.

    வேங்கிக்கால்:

    ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.

    இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ராஜகோபுரம் வழியாக மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    புத்தாண்டு தினத்தில் 3 முதல் 4 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். அம்மணி அம்மன் கோபுரம் வழியாக வருவாய் துறை, காவல்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட துறையினரால் அழைத்து வரப்படும் வி.ஐ.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதை பார்த்த வெளிமாநில பக்தர்கள் அங்கு காத்திருந்தனர்.

    நேற்று காலை சுமார் 11 மணியளவில் அம்மணி அம்மன் கோபுர கதவு பூட்டப்பட்டிருந்து. இந்நிலையில் அரசு துறையினரால் அழைத்து வரப்படும் வி.ஐ.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக கோபுர வாசல் கதவுகள் திறக்கப்பட்டது. அப்போது அங்கு காத்திருந்த பக்தர்கள் முண்டி அடித்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்ததால் பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பக்தர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்து அனுப்பினர்.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில் அருணாசலேசுவரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த கோபுர வாசல் வழியாக தரிசனத்திற்கு செல்வது என்பது குறித்து முறையான அறிவிப்பு பலகையோ, வழிகாட்டி பதாகைகளோ வைக்கப்படுவதில்லை. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியுள்ளது. 5-ம் பிரகாரத்தில் திருப்பதியில் உள்ளதைப்போல் பக்தர்கள் அமர்ந்து காத்திருக்கும் அறைகள் அமைக்க வேண்டும். இந்த அறைகளில் கழிவறை வசதிகள் செய்யப்பட வேண்டும்.

    அதிக அளவில் வரும் பக்தர்களின் நலன் கருதி தரிசன முறையில் உரிய மாற்றம் கொண்டு வர இந்து சமய அறநிலையத்துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.

    • ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்.
    • பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவில் நடை திறக்கப்பட்டு சம்பந்த விநாயகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

    உற்சவ மூர்த்திக்கு வெள்ளி கவசம் அணிவிக்க பட்டிருந்தது. அதிகாலை கோவிலில் நடை திறக்கும் போதே, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

     தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து மாட வீதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக, சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    கோவிலுக்குள் சிறப்பு மற்றும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இன்று காலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இன்று சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு நாள் முழுவதும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • மகா தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.
    • மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடராஜருக்கு மகா தீப மை திலகமிடப்பட்டது.

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது.

    ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து நேற்று காலை நாடராஜருக்கும், அம்பாளுக்கும் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட மகா தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.

    அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் திரண்டு இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தொடர்ந்து மாணிக்கவாசகர் உற்சவம் முன்னே செல்ல நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியபடி திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து தீப மை பிரசாதம் வருகிற 30-ந் தேதி முதல் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து கோவில் நிர்வாக அலுவலத்தில் தீப மை பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×