search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவண்ணாமலையில் உத்தராயண புண்ணிய கால உற்சவம் ஆரம்பம்
    X

    திருவண்ணாமலையில் உத்தராயண புண்ணிய கால உற்சவம் ஆரம்பம்

    • சூரியன் பயணம் செய்யும் காலம் உத்தராயண புண்ணிய காலம்.
    • உத்தராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவண்ணாமலை:

    சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூரியன் பயணம் செய்யும் காலம் உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலம் சிவாலயங்களில் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், உத்தராயண புண்ணியகால உற்சவம், தட்சிணாயண புண்ணிய கால உற்சவம் ஆகியவற்றின் தொடக்கமாக சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி உத்தராயண புண்ணியகால உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து விநாயகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி சன்னதியில் இருந்து மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க காலை 6.18 மணியளவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்திகோஷங்கள் எழுப்பினர்.

    இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். தினமும் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர் மாட வீதிஉலா நடக்கும். விழாவின் நிறைவு நாளான வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற திருவூடல் உற்சவமும், 17-ந்தேதி (புதன்கிழமை) மறுவூடல் உற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×