என் மலர்
திருவண்ணாமலை
- கணவர் போலீசில் புகார்
- தாலியை கழற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார்
செய்யாறு:
செய்யாறு டவுனை சேர்ந்தவர் 34 வயதுடைய வாலிபர். இவர் மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிகாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது 24 வயது உடைய மனைவி ஸ்ரீபெரும்புதூரில் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 31-ந் தேதி இளம் பெண் ஆரணியில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்றார்.
மனைவியை குடும்பம் நடத்த வருமாறு கணவன் அழைத்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண் தன்னை தேட வேண்டாம் என்று கடிதம் எழுதி தாலியை கழற்றி வைத்துவிட்டு தனது தாயார் வீட்டில் இருந்து மாயமானார்.
இது குறித்து செய்யாறு போலீசில் கணவர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
- அதிகாரியை கண்டவுடன் டிரைவர்கள் தப்பி ஓடி விட்டனர்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அருகே 12 புத்தூர் கிராமத்தில் உள்ள ஓமந்தாங்கல் ஏரியில் மொரம்பு மண் கடத்துவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர் .
அதபேரில் ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் மண் நிரப்பிக் கொண்டிருந்தனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருவரை கண்டவுடன் டிரைவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் மண் அள்ளிய பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்து தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து கோட்டாட்சியர் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதே போல ஆரணி அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் ஏரியில் 2 டிராக்டர்களில் மண் கடத்துவதாக வந்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர் .
இந்த 2 சம்பவங்களில் தப்பி ஓடிவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- மறியலில் ஈடுபட்டதால் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் கனிமவள துறை சார்பில் வேலூர் பகுதியை சேர்ந்தவருக்கு கல்குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் நேற்று காலை கல்குவாரிக்கு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் கல் உடைக்கும் பணியில் ஊழியர்களுடன் ஈடுபட்டார்.
இதனை அறிந்த கிராம மக்கள் ஆரணி -முள்ளண்டிரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
சேத்துப்பட்டு:
வந்தவாசியில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை போளூர் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது.
சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு அரசு பள்ளி அருகே லாரி வந்து கொண்டிருந்தது.
திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி மரத்தில் மோதியது. மேலும் சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதி நின்றது.
அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது.
இதில் முனியப்பன், மனைவி ஜெயலட்சுமி, மகன் ஏழுமலை இவரது மனைவி சுகன்யா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
- நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது பரிதாபம்
- தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அடுத்த கரிபூரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் மணிகண்டன் (வயது 31). விவசாயி.
இவர்களுக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இதில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நிலத்திற்கு சென்றார்.
அப்போது அருகே இருந்த கிணற்றில் கால் தவறி விழுந்தார்.
இதில் மணிகண்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கிணற்றில் மூழ்கி இறந்தார். வெகு நேரமாகியும் மணிகண்டன் வீட்டுக்கு வராததால் அவரைத் தேடி குடும்பத்தினர் இன்று காலை நிலத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்போது மணிகண்டன் கிணற்றில் விழுந்து இறந்து கிடந்தது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் சேத்துப்பட்டு போலீசா ருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி மணிகண்டன் உடலில் கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
இது சம்பந்தமாக சேத்துப்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து, மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தரமற்ற ரேசன் அரிசி வழங்குவதாக புகார்
- ஆரணி கவுன்சிலர்கள் அதிர்ச்சி
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.
இதில் நகர மன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஏ.சி.மணி உள்ளிட்ட 33 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
நேற்று ஆரணி நகராட்சி அலுவலகம் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகரமன்ற துணை தலைவர் பாரிபாபு முன்னிலை வகித்தார். ஆணையர் குமரன் வரவேற்றார். நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார்.
முன்னதாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தெடுக்கபட்ட நகர மன்ற தலைவர், துணை தலைவர் மன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கி ஆணை பிறப்பித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.
நகரமன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஆரணி டவுன் கார்த்திகேயன் சாலை பகுதியை சேர்ந்த பழனி என்பவர் திடீரென உள்ளே புகுந்தார்.
அப்போது வைகை கூட்டுறவு அங்காடி-2ல் வழங்கபட்ட அரிசி தரமற்ற முறையில் உள்ளதாக கூறி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணியிடம் முறையிட்டார்.
அவரிடம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் உங்களை யார் உள்ளே வர அனுமதி கொடுத்தார்கள். தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவ லகத்திற்கு செல்லுமாறு கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பில் இருந்த போலீசார் உடனடியாக பழனியை சமரசம் செய்து கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளியே அனுப்பினர். இதனால் சிறிது நேரம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
- பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவு
- உணவுகளை தயாரிக்கும் முறை, தரம் குறித்தும் கேட்டறிந்தார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சி மற்றும் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும். திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நான் முதல்வன் திட்டம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் ஆகியவை சரியான முறையில் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்தார்.
மேலும் காலை உணவு திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை தயாரிக்கும் முறை, தரம் குறித்தும் கேட்டறிந்தார்.
மக்களை தேடி மருத்துவம், முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், விளையாட்டு விடுதி மாணவிகளுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்த பின் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தீரஜ்குமார் உத்தரவிட்டார்.
தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடியே 99 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டுமான பணிகள், கீழ்பென்னாத்தூர் அடுத்த நாரியமங்கலம் கிராம ஊராட்சியில் 13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், 6 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் மூன்று வகுப்பறை கட்டிடங்கள் பழுது பார்க்கும் பணி, கீழ்பென்னாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, மகளிர் திட்ட இயக்குநர்சையித் சுலைமான், சார் ஆட்சியர் அனாமிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெற்றிவேல், சுகாதார பணிகள் இணை இயக்குநர் செல்வகுமார், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கணேஷ், கோட்டாட்சியர்கள் மந்தாகினி, தனலட்சுமி, தாசில்தார் சரளா, சாப்ஜான் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடந்தது
- ஊராட்சி குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் காந்தி நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் பாரதி ராமஜெயம், மாவட்ட ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சந்திரயான்- 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியமைக்காக இஸ்ரோவிற்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் இல.சரவணன், ஆராஞ்சி ஆறுமுகம், அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்யாறு:
வெம்பாக்கம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி. இவரது 21 வயதுடைய மகள் பிளஸ் 2 முடித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 29-ந் தேதி இளம் பெண் கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் இளம் பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.
அவர் கிடைக்காததால் இது குறித்து பிரம்ம தேசம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
- 18-ந் தேதி நாடு முழுவதும் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது
- சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகிற 18-ந் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்வதற்காக வந்தவாசி சன்னதி தெருவில் மாசு இல்லாத பேப்பர் கூழ் கொண்டு விதவிதமான விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் எலி வாகன பிள்ளையார், மயில்வாகன பிள்ளையார், சிம்ம வாகன பிள்ளையார், குழந்தை பிள்ளையார், மும்மூர்த்தி பிள்ளையார், விநாயகர் சிலைகள் சிலை வடிவமைப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பலவிதமான வண்ணங்களை கொண்டு தயாராகும் விநாயகர் சிலைகளை வந்தவாசி சுற்றியுள்ள சென்னாவரம், பிருதூர், மருதாடு, தென்னாங்கூர், தெள்ளார், பொண்ணூர், கீழ் கொவளைவேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் வாங்கி செல்வார்கள் என்று சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
- மழை நீர் கால்வாயில் எந்த வித தடையும் இல்லாமல் வெளியேறுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்
- அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
தற்போது பவுர்ணமி மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் பகல், இரவு நேரங்களில் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.
இதனை கருத்தில்கொண்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு தேவையான கூடுதல் சுகா தார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கிரிவலப்பாதை செங்கம் சாலை சந்திப்பு பகுதி, அடி அண்ணாமலை சீனிவாசா பள்ளி அருகில், வாயுலிங்கம் கோவில் அருகில், கோசாலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் அருகில், சின்னக்கடை வீதியிலும் புதிதாக சுகாதார வளாகம் கட்டுவதற்கான இடத்தினை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.
மேலும் சின்ன கடை வீதியில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் கால்வாயில் மழை சமயத்தில் மழைநீர் எந்த வித தடையும் இல்லாமல் முறையாக வெளியேறுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணா துரை எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, சரவணன் எம்.எல்.ஏ., மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர் ஸ்ரீதரன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனி வேல், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், திருவண் ணாமலை நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, திருவண்ணாமலை ஒன்றியக் குழு துணை தலைவர் ரமணன், தி.மு.க. நிர்வாகிகள்
பன்னீர்செல்வம், பிரியா விஜயரங்கன், கார்த்திவேல் மாறன், அருணை வெங்கட் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- வருகின்ற நவம்பர் மாதம் நடக்கிறது
- நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
வேங்கிக்கால்
திருவண்ணாமலையில் மாவட்ட சீனியர் தடகள சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கார்த்தி வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது. வருகின்ற நவம்பர் மாதம் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில சீனியர் தடகள போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் வீரர்கள் வர உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு செயலாளர் சுரேஷ்குமார் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.