என் மலர்
திருவண்ணாமலை
- எதிர்பாராத விதமாக விழுந்தார்
- போலீசார் விசாரணை
போளூர்:
போளூர் அடுத்த அல்லி நகரை சேர்ந்தவர் பழனி (வயது 45). இவர் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி வசந்தி, வினோத், விக்னேஷ் என 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று மாலை பழனி அதே பகுதியில் உள்ள கிணற்றின் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதனைக் கண்ட அவரது மகன்கள் கத்தி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் கிணற்றில் விழுந்த பழனியை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் போளூர் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பழனி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பழனி உடலை மீட்டு உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1,017 பேருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது
- கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
வந்தவாசி:
வந்தவாசியை அருகே தென்வணக்கம்பாடி கிராமத்தில் வருமுன் காப்போம் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு தென்வணக்கம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் சக்குபாய் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். திமுக மாவட்டச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், தெள்ளார் ஒன்றியக்குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், செய்யாறு சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் கோதண்டராமன் வரவேற்றார்.
வந்தவாசி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார் முகாமை தொடக்கி வைத்தார். தெள்ளார் வட்டார மருத்துவ அலுவலர் ஹித்தேன்ஷா தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இதில் 1017 பேருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில் 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 5 பேருக்கு மக்களை தேடி மருத்துவப் பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.
முகாமில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் ப.இளங்கோவன், டி.டி.ராதா, தெள்ளார் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.ஆனந்த், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.பழனி அங்கன்வாடி மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இருதியில் சுகாதார ஆய்வாளர் பாஸ்கர் நன்றி தெரிவித்தார்.
- அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
- ஏராளமானேனார் கலந்து கொண்டனர்
வேங்கிகால்:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கு போலீஸ் நிலையத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை கிரிவல பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், மேற்கு பகுதியில் உள்ள பொது மக்களின் நலனுக்காகவும் செங்கம் ரோடு கிரிவலப்பாதை சந்திப்பில் புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மேற்கு போலீஸ் நிலைய திறப்பு விழாவிற்கு வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமை தாங்கினார்.
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, கலெக்டர் பா.முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குத்துவிளக்கு ஏற்றி புதிய போலீஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
விழாவில் மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி, தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், துணைத்தலைவர் சு.ராஜாங்கம், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், குட்டி புகழேந்தி, மக்கள் நண்பர்கள் குழு தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் விசாரணை
- மின்ஒயர்களும் அறுந்து சேதமானது
வந்தவாசி:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் வெங் கடேசன் (வயது 30), வேன் டிரைவர்.
இவர் நேற்று அதி காலை வேனில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திண்டிவனத்திலிருந்து காஞ்சீபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
வந்தவாசி-திண்டிவனம் நெடுஞ்சாலையில், இளங்காடு கூட்டுச் சாலை அருகே வந்தபோது சாலையோரம் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் டிரெயிலர் மீது வேன் மோதியது.
அதன்பிறகும் நிற்காத வேன் சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீதும் மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து சேதமாகி கம்பிகளும் அறுந்து விழுந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த டிரைவர் வெங்கடேசன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
மின்கம்பம் சேதமடைந்து மின்ஒயர்களும் அறுந்ததால் இது குறித்து பொன்னூர் போலீஸ் நிலையத்தில் உதவி மின் பொறியாளர் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல்நிலை சரியில்லாததால் மன உளைச்சல்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த குறிப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் தீபா (வயது 22).
இவர் 1½ ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் தலையில் அடிபட்டு தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார். திடீரென வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவருடைய தந்தை தீபாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார்.
பின்னர் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேல் மருவத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீபாவை பரிசோதித்த டாக்டர்கள் தீபா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கீழ்க்கொ டுங்காலூர் போலீஸ் நிலையத்தில் ஏழுமலை புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு அடுத்த அத்திக்குளம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை, வட சேந்தமங்கலம் கிராமத்தில் ஆரம்பப் பள்ளி கட்டிடம், அத்தி கிராமத்தில் ஆரம்பப் பள்ளி கட்டிடம், நாடக மேடை, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், வட சேந்தமங்கலம் கிராமத்தில் ஆரம்பப் பள்ளி கட்டிடம், காரணி கிராமத்தில் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை மக்களின் பயன்பாட்டிற்காக திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய உற்பத்தி குழு உறுப்பினர் புரிசை எஸ்.சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் திராவிட முருகன், ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் தகவல்
- 47 வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் இரவு காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கு விண்ணப்பி க்கலாம் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்படை) இரண்டாம் சிலை சிறை காவலர், தீயணைப்பாளர் பணிகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
ஜூலை மாதம் 1-ந் தேதி வரை 47 வயதுக்கு மேற்படாத தகுதியும் விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரர்கள் செப்டம்பர் மாதம் 17-ந் தேதிக்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- வருகிற 27-ந்தேதி நடக்கிறது
- சான்றிதழ்களின் நகலுடன் கலந்து கொள்ள வேண்டும்
திருவண்ணாமலை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவண்ணாம லையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
அருணை பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடக்கிறது.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட் டம் சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்ப டிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் தேர்ச்சி பெற்ற வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களு டைய 4 பாஸ்போர்ட்டு சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.
முகாமில் கலந்து கொள்ள விருப்பமு ள்ளவர்கள்
www.tnprivatejobs.tn.gov. in என்ற இணையதள முகவரி அல்லது https://forms.gle/ NSVtGVHwEAECg9qF7 என்ற google படிவத்தில் பதிவு செய்ய லாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்று கொள்ளலாம்.
எனவே திருவண்ணா மலை மாவட்டத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
- 20 கிலோ இறைச்சி, துப்பாக்கி பறிமுதல்
- சாத்தனூர் காப்பு காட்டில் துணிகரம்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள பெண்ணையாறு காப்புக்காட்டில் சாத்தனூர் வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையில் வனவர் ராதா, வனக்காப்பாளர்கள் சிலம்பரசன், கார்த்திகேயன், ராஜ்குமார், வெங்கடேசன் உள்ளிட்டோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காப்புக் காட்டில் உரிமம் இல்லாத கள்ள நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி புள்ளிமானை வேட்டையாடி கூறு போட்டு கொண்டிருந்த 4 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரனையில் அவர்கள் தண்டராம்பட்டை சேர்ந்த சேகர்,
புளியம்பட்டியை சேர்ந்த வரதன், சங்கர்,
ஏழுமலை என்பதும் தெரியவந்தது.
அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 கிலோ மான் கறி, வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
- மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- சுகாதாரமான முறையில் பராமரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
செங்கம்:
செங்கம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமப் பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுவது மற்றும் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சைகள் உட்பட பலதரப்பட்ட மக்கள் செங்கம் அரசு மருத்து வமனைக்கு தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் செங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த பரிசோதனை ஆய்வகம் அருகே உள்ள கழிவறையிலிருந்து கழிவு நீர் வெளியேறி ஆய்வகம் வரை தேங்கியுள்ளதாக சமூக ஆர்வலர் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் ரத்த பரிசோதனை செய்ய ஆய்வகத்திற்கு வருபவர்கள் தேங்கியுள்ள கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவறையில் இருந்து கழிவு நீர் வெளியேறியதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அங்கு ஆய்வகத்தின் அருகே கழிவுநீர் தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடுகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.
மேலும் செங்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சுகாதார சீர்கேடுகள் குறித்து புகார்கள் பொதுமக்கள் கூறும் நிலையில் மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு செங்கம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து நடவடிக்கை வேண்டும்.
போதுமான துப்புரவு பணியாளர்களை கொண்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளவும், கழிவறைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் செங்கம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
- மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு மேநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மோகன்ராஜ் தலைமையில் ஜெனீவா ஒப்பந்த நாள் அனுசரிக்கப்பட்டது. முதுகலை ஆசிரியர் சிங்காரகிருஷ்ணகுமார், உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சாரண ஆசிரியர் சந்திரநாதன், பட்டதாரி ஆசிரியர் நந்தகுமார் ஆகியோர் சாரண மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தினர்.
வெற்றி பெற்ற சாரண- சாரணிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பட்டதாரி ஆசிரியர் சண்முகம் நன்றி கூறினார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
- 50 படுக்கைகள் கொண்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் உள்ள பழைய அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.6 கோடியே 75 லட்சம் மதிப்பில் 50 படுக்கை வசதிகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் ஆஸ்பத்திரி கட்டப்பட்டது. புதிய மருத்துவமனை கட்டிடத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து திருவண்ணாமலை ஆயுஷ் ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
மூன்று தளங்களுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள ஆயுஷ் ஆஸ்பத்திரியில் சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ புற நோயாளிகள் பிரிவும், 50 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரி்வும் செயல்படும்.
மேலும் அனைத்து விதமான நோய்களுக்கும் சித்த மருத்துவத்தின் 32 வகையான புற மருத்துவ சிகிச்சை, நீர் சிகிச்சை, வாழை இலை குளியல், மண் குளியல், அக்குபஞ்சர், இயன்முறை சிகிச்சை உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது.
ஆஸ்பத்திரி கட்டிட திறப்பு விழாவில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரவிந்தன், சுகாதார பணிகள் இணை இயக்குநர் செல்வகுமார், மாவட்ட சித்த மருத்துவர் கார்த்திகேயன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஒப்பந்ததாரர் ப்ரியா விஜயரங்கன், நகர மன்ற உறுப்பினர் மெட்ராஸ் சுப்பிரமணி, மக்கள் நண்பர்கள் குழு தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.