search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • மிஷன் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது
    • பக்தர்கள் அவருடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்

    திருவண்ணாமலை:

    நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

    தற்போது வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அருண் விஜய் தனது மனைவி ஆரத்தியுடன் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். கோவிலை ஒட்டிய 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையை சுற்றி கிரிவலம் வந்தார்.

    அப்போது கிரிவலம் சென்ற பக்தர்கள் அவருடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.

    • சூளைக்கு கடத்தியது தெரியவந்தது
    • டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை வருவாய் ஆய்வாளர் காளிதாசன், கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் கிராமத்தில் ரோந்து சென்றார்.

    அப்போது காட்டுக்காநல்லூர் பஸ் நிறுத்தம் வழியாக வந்த லாரியை வழிமடக்கி சோதனை செய்தார். அந்த லாரியில் அனுமதியின்றி 6 யூனிட் ஏரி மண்ணை சூளைக்கு கடத்தியது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து கண்ணமங்கலம் போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார்.

    அதன் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரையும் தேடி வருகின்றனர்.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்: 

    சந்தவாசல் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் கமண்டல நதிக்கரையில் உள்ள கிராம தேவதை பொன்னியம்மனுக்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு திரளான பெண்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் நாராயணமங்கலம் கிராமத்தில் கருங்குன்றில் அமைந்துள்ள வெற்றி வேல் முருகன் கோவிலில் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதிய வெற்றி வேல் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழபட்டனர்.

    • போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்
    • போக்குவரத்து பாதிப்பு

    செங்கம்:

    செங்கம் அடுத்த வளையாம்பட்டு பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை செங்கம்- வலசை சாலையில் பஸ்ஸை மறித்து காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது குடிநீர் முறையாக விநியோகம் செய்யாததால் பெண்களும், குழந்தைகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர் என கூறி போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரி போலீசாரிடம் முறையிட்டனர். போலீசார் உடனடியாக குடிநீர் வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என்று கூறினார்.

    பேச்சுவார்த்தையில் சமரசம் அடைந்து அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • பலர் கலந்துக் கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு கல்வி மாவட்டத்தைச சேர்ந்த கொருக்கை, வாழ்குடை, செங்காடு, கோவிலூர், அனக்காவூர், புரிசை, உக்கல், ஆக்கூர் ஆகிய அரசு மேல் நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் முன்னாள் எம்எல்.ஏ வு மான எஸ்.பி.ஜே.கமலக்கண்ணன் தலைமைத் தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், அனக்காவூர் ஒன்றியக்குழுத் தலைவர் திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் (பொ) தமிழரசன் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி ஒ.ஜோதி எம் எல் ஏ கலந்துகொண்டு 585 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    முன்னதாக கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் சுற்று சுவர் கட்டிடம் கட்டும் பணியினை எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தொடங்கி வைத்தார்.

    இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அருள் நரசிம்மன், டி.பாஸ்கர், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் மீனாட்சி தமிழரசன், ஒன்றியக் கவுன்சிலர் மகாலட்சுமி அருள், ஒப்பந்ததாரர் கதிரேசன் குமரவேல், திமுக நிர்வாகிகள் மோ.ரவி, சி.கே.ரவிக்குமார், பார்த்தீபன், ஜெ.ஜெ.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • வருகிற 8-ந் தேதி திறப்பு
    • மக்களுக்கு மிகச் சிறந்த பொழுது போக்கு மையமாக உள்ளது

    வேங்கிகால்:

    திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி எதிரில் தோட்டக்கலைத்துறை சார்பில் 9 ஏக்கர் பரப்ப ளவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை கலெக்டர் பா.முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்க ளுடன் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலைத்துறை பூங்காவினை வருகிற 8-ந் தேதி மாலை பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைக்கிறார். பூங்கா நுழைவு கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்படும்.

    இந்த கட்டணம் பூங்காவை தூய்மையாக பராமரிக்க பயன்படுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    கிரிவலப்பாதையில் உள்ள தோட்டக்கலை துறை பூங்கா நகர மக்களுக்கு மிகச் சிறந்த பொழுது போக்கு மையமாகவும், குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடமா கவும் அமைந்துள்ளது.

    • தூக்க கலக்கத்தில் டிரைவர் வாகனம் ஓட்டியதால் விபரீதம்
    • போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்

    போளூர்:

    போளூரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் செங்கம் நோக்கி இன்று அதிகாலை 4 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.

    செங்கத்தில் இருந்து கண்டெய்னர் லாரி போளூர் நோக்கி வந்தது. காங்கேயனூர் அருகே வரும்போது தூக்க கலக்கத்தில் டிரைவர் ஓட்டியதால் லாரி எதிர்பாராத விதமாக எதிரே வந்த பஸ் மீது மோதியது.

    இதில் பஸ் சேதமானது. லாரி சாலையோரம் கவிழ்ந்தது. பஸ்சில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்ற வர்கள் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு போளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக 4 பேரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போளூர் போலீசார் பஸ்சையும், லாரியும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுமண தம்பதியினர் தாலி மாற்றி வழிபாடு
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் ஸ்ரீஅலமேலுமங்கை, பத்மாவதி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கட்டரமண பெருமாள் கோவில் உள்ளது.

    இக்கோவிலின் வரலாறு சார்ந்த பெருமாளின் தங்கையாக ஆற்றின் நடுவில் சென்னம்மாள் பாறை உள்ளது. இந்தக் கோவிலில் இன்று ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெற்றது.

    விழாவில் திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மாவட்டங்களிலிருந்தும், சென்னை, பெங்களுர் போன்ற பெருநகரங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பக்தர்கள் பொங்கலிட்டு குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, காதணிவிழா நடத்தியும் வழிபட்டனர்., புதுமண தம்பதியினர் புது தாலி கயிறு மாற்றுதல், சென்னம்மாள் பாறையில் மஞ்சள், சிவப்பு, பொறி கடலை, கருமணி வலையல் போன்றவை வைத்து பச்சை போடுதல் போன்ற பல்வேறு பிராத்தனைகள் செய்து வழிபட்டனர்.

    திருவண்ணாமலை, போளுர், ஊத்தங்கரை, செங்கம், சிங்காரப்பேட்டை, அருர் நகரங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.பத்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த மோரணம் ஏ காலணியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் புறம்போக்கு இடம் உள்ளது. அதில் தனிநபர் ஒரு வீடு கட்டி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கோவிலை சுற்றி வேலி அமைத்தனர். இந்த வேலியை தனி நபர் அகற்றி உள்ளார். இதனால் ஆத்திரம் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று இரவு செய்யாறு -ஆற்காடு சாலையில் வேலியை அகற்றியவரை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தூக்கில் பிணமாக தொங்கினார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த அசலமா பேட்டையை சேர்ந்தவர் சுகுமார் (வயது 48). இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி திலகம், மகன் கோகுல வாசன் (20).

    திலகம் அதே பகுதியில் உள்ள கோவில் அருகில் பங்க் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று காலை மகன் மற்றும் மனைவியை கடை திறப்பதற்காக வீட்டிலிருந்து சுகுமார் அனுப்பி வைத்தார். சிறிது நேரத்திற்கு பின்பு கடைக்கு சென்ற திலகம் சுகுமாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

    அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. சந்தேகமடைந்த அவர் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது சுகுமார் வீட்டில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த திலகம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுகுமாரை மீட்டு பெருங்கட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுகுமாரின் மகன் கோகுல வாசன் மோரணம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுகுமார் தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குலத்தொழிலாக நாமக்கட்டியை தயாரித்து வருகிறோம்.
    • மழைக்காலங்களில் நாமக்கட்டியை உலர்த்த முடியாது.

    திருவண்ணாமலை:

    வைணவ பக்தர்கள், நெற்றியில் திருநாமம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இத்தகைய பக்தி மிகுந்த திருநாமத்தை, நெற்றியில் இடுவதற்கு பயன்படுத்தப்படும் 'நாமக்கட்டி' திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஜடேரி கிராமத்தில் தயாரிக்கப்படுகிறது. இத்தொழிலில் 5 தலைமுறைகளை கடந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். குடிசைத் தொழிலாக, குடும்பத் தொழிலாக நாமக்கட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாமக்கட்டி தயாரிப்பதற்கு தேவையான வெள்ளை மண், ஜடேரி அடுத்த தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. பின்னர் செக்கு இழுப்பதை போல் மாடுகளை கட்டி இழுத்து பவுடராக அரைக்கப்படுகிறது.

    பின்னர் தண்ணீரில் ஊற வைத்து, கழிவுகள் அகற்றப்படுகிறது. அதன்பிறகு, ஈரப்பதத்துடன் வெள்ளை மண் இருக்கும்போது, நாமக்கட்டிகளாக தட்டி, வெயிலில் காய வைத்து ரசாயனம் கலப்பில்லாமல் தயாரிக்கப்படுகிறது.

    இதையடுத்து நாடு முழுவதும் உள்ள வைணவ திருத்தலங்களுக்கு நாமக்கட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில், திருமலை திருப்பதி முதன்மையாக உள்ளன.

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. மேலும் மருத்துவ பயன்பாட்டுக்கும் நாமக்கட்டி பயன்படுத்தப்படுவதால், மருந்து தயாரிப்பாளர்களும் கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ நாமக்கட்டி, மிக குறைந்த விலையாக ரூ.30 என விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் "ஜடேரி நாமக்கட்டி"க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால், நாமக்கட்டியை தயாரிக்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

    நாமக்கட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறும்போது, "குலத்தொழிலாக நாமக்கட்டியை தயாரித்து வருகிறோம். ஜடேரி கிராமத்தில் ஆண்டுக்கு 100 டன் அளவுக்கு நாமக்கட்டி தயாரிக்கப்படுகிறது.

    இங்கிருந்து, திருப்பதி உள்ளிட்ட வைணவ திருத்தலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இத்தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை.

    நாமக்கட்டி தயாரிக்க தேவைப்படும் வெள்ளைப்பாறையை வெட்டி எடுக்க, அரசுக்கு பணம் செலுத்துகிறோம். ஒரு யூனிட் வெள்ளை பாறையை வெட்டி எடுத்து கொண்டு வர ரூ.5 ஆயிரம் செலவாகிறது. வெள்ளைப்பாறையை இலவசமாக எடுக்க அனுமதிக்க வேண்டும்.

    மேலும் மழைக்காலங்களில் நாமக்கட்டியை உலர்த்த முடியாது என்பதால், கிடங்கு அமைத்து கொடுக்க வேண்டும். மேலும் ஜடேரியில் தயாரிக்கப்படும் நாமக்கட்டிக்கு 'புவிசார் குறியீடு' வழங்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது.

    இதற்காக மத்திய-மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இத்தருணத்தில் எங்களது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

    • 100 நாள் வேலை அட்டையை சாலையில் போட்டனர்
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

    செங்கம்:

    செங்கம் அடுத்த புதுப்பேட்டை பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக ஊராட்சி நிர்வாகம் அறிவித்து அதன்மூலம் பயனாளிகள் தேர்வு செய்து 100 நாள் வேலை வழங்கப்பட்டுள்ளது.

    தேர்வு செய்த பயனாளிகளை 10 வருடங்களுக்கு முன்பு உள்ள கணக்கீடு பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்படுத்தி தற்போது புதியதாக கணக்கீடு செய்து அதன்மூலம் பயனாளிகளை தேர்வு செய்திட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துறைச்சார்ந்த அதிகாரிகளிடம் அப்பகுதியில் உள்ள பெண்கள் பலமுறை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட பெண்கள் 100 நாள் வேலை அட்டையை சாலையில் போட்டு ஒப்பாரி வைத்து நூதனமுறையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த மேல்செங்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினர். இதைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.

    ×