என் மலர்
திருவண்ணாமலை
- பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடந்தது.
- பந்தக் காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.
4-ந்தேதி அதிகாலை அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.
அன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை மற்றும் இரவில் பஞ்ச மூர்த்திகள் மாடவீதி உலா நடைபெறும்.
13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகள் செய்வதற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடந்தது.
அருணாசலேஸ்வரர் கோவில் சன்னதியில் உள்ள சம்பந்த விநாயகர் மற்றும் பந்தக் காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து கோவிலில் இருந்து பந்தக்கால் எடுத்து வரப்பட்டு ராஜகோபுரம் முன்பு நடப்பட்டது.
இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருவண்ணாமலை மாநகராட்சி செய்து வருகிறது.
விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரபாகர், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நேற்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
- 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரமானது.
பின்னர் சொந்த ஊருக்கு பக்தர்கள் செல்வதற்காக ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் குவிந்தனர்.
விழுப்புரம், சென்னை செல்லும் ரெயிலில் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்றனர். ரெயிலில் இடம் கிடைக்காததால் பக்தர்கள், பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதேபோல தற்காலிக பஸ் நிலையத்திலும் பக்தர்கள் குவிந்தனர். போதிய பஸ் வசதி இல்லாததாலும், பஸ்சில் இடம் கிடைக்காமல் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
மதுரை, திருச்சி பகுதிகளுக்கு அதிகாலை 4 மணி முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். திருக்கோவிலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போதிய பஸ் வசதி இல்லாததால் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், திருக்கோவிலூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பஸ் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மிகவும் அவதி அடைந்தனர். மேலும் 14 கிலோமீட்டர் கிரிவலம் சென்று விட்டு சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் காத்திருந்தோம். இதனால் நாங்கள் களைப்பாக உள்ளோம்.
போதிய பஸ் இல்லாமல் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. வரும் நாட்களில் இது போன்று பக்தர்களை காத்திருக்க வைக்காமல் பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.
- பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
- புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.27 மணிக்கு தொடங்கி மறுநாள் 18-ந் தேதி (புதன்கிழமை) காலை 9.10 மணிக்கு நிறைவடைகிறது.
புரட்டாசி மாத பிறப்பன்று (17-ந் தேதி) பவுர்ணமி வருவதாலும் அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதாலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
- கோபி நயினார் இயக்கத்தில் மனுசி என்ற படத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.
- இது தொடர்பான புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஆண்ட்ரியா, நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் மனுசி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்தார்.
இது தொடர்பான புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
- 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்.
வேங்கிக்கால்:
திருவண்ணாலையில் ஆவணி மாத பவுர்ணமியை யொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கிரிவலப்பாதை அமைந்து உள்ள 14 கிலோமீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இடைவேளை இல்லாமல் பக்தர்கள் தொடர்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜ கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று தரிசனம் முடிந்ததும் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்தனர்
தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். பல லட்சம் பக்தர்களின் வருகையால் திருவண்ணாமலை நகரமே குலுங்கியது.
அரசு, தனியார் பஸ்கள், வேன், கார் மற்றும் ஆட்டோக்கள் என எண்ணில் அடங்காத வாகனங்கள் திருவண்ணாமலை நகரை ஆக்கிரமித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. திருவண்ணாமலை-செங்கம் சாலை, செங்கம் அருகே உள்ள புறவழிச் சாலை, திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி சாலை ஆகிய வழிதடங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், அதனை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் திக்கு முக்காடினர்.
இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். பவுர்ணமி கிரிவலத்திற்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது.
பக்தர்கள் சொந்த ஊர் செல்ல திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் குவிந்தனர். ரெயில்களில் இடம் கிடைக்காமல் தவித்தனர்.
- பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
- கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடு வதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, பவுர்ணமி வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 2.58 மணிக்கு தொடங்கி மறுநாள் 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1.02 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம்.
பவுர்ணமி கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர் பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் பந்தல் அமைத்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மற்ற உள் பிரிவு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கவில்லை.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளங்கலை, முதுகலை பயிற்சி டாக்டர்கள் இன்று 2-வது நாளாக டாக்டர்கள் , பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணிக்கு வந்தனர்.
பேராசிரியர்கள், துறை தலைவர்கள் மற்றும் டாக்டர்கள் புற நோயாளிகள் பிரிவு கட்டிடம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி சுமார் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் பந்தல் அமைத்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். புறநோயாளிகள் பிரிவு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதோடு, கையில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் வழக்கம்போல் செயல்பட்டது.
புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் , அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில இணை செயலாளர் டாக்டர். கீர்த்தி தலைமையில் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவம் பார்த்தனர். மற்ற உள் பிரிவு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கவில்லை. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.
- சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
- சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரமோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆடிப்பூர பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு பராசக்தி அம்மன் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மேலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெறும்.
10-ம் நாள் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அதனை தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெறும்.
- ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
- தனுஷ் பிறந்தநாளை ஒட்டி ரசிகர்கள் அவர் வீட்டிற்கு முன்பு நேற்று குவிந்தனர்.
தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் மட்டும்13 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
ராயன் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நேரத்தில் நேற்று தனது பிறந்தநாளை தனுஷ் கொண்டாடினார். பிறந்தநாளை ஒட்டி ரசிகர்கள் தனுஷ் வீட்டிற்கு முன்பு நேற்று குவிந்தனர். தனது வீட்டிற்கு முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் அனைவருக்கும் தனுஷ் நன்றி தெரிவித்தார். அந்த வீடியோ நேற்று இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், ஆடி கிருத்திகையை ஒட்டி, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் நடிகர் தனுஷ் கையில் ருத்ராட்ச மாலையுடன் மகன்களோடு உருகி நின்று சாமி தரிசனம் செய்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர் ஒருவர் ரேஷன் சேலையை வழங்கி உள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பவுர்ணமியின்போது கோவிலில் உண்ணாமலை அம்மன் சன்னதியின் முன்பு உள்ள அம்மன் சிலைக்கு ரேஷன் கடையில் வழங்கப்படும் விலையில்லா சேலை அணிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.
இதுகுறித்து அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜோதியிடம் கேட்டபோது, திருவூடல் நிகழ்ச்சியில் மண்டக படியின்போது பக்தர்கள் சிலர் அம்மனுக்கு சேலையை சாத்தினர். இதில் பக்தர் ஒருவர் ரேஷன் சேலையை வழங்கி உள்ளார். பவுர்ணமியின்போது அம்மன் சிலைக்கு அந்த ரேஷன் கடை சேலை அணிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அறிந்ததும் உடனடியாக சேலை மாற்றப்பட்டது' என்றார்.
- அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
- கோபுர நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
ஆடி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 6.05 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பல்வேறு பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருகை தர தொடங்கினர்.
கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். காலையில் குறைந்த அளவிலான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பவுர்ணமி மாலையில் தொடங்கியதால் பெரும்பாலான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்லலாம் என்று வரிசையில் நின்றனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மதியம் வரை கோவிலில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் சாமி தரிசனம் 4 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.
கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உட்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விரைந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
மதியத்திற்கு மேல் ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். பகலில் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டாலும் மாலையில் இருந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலமானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.48 மணியளவில் நிறைவடைகிறது. அதனால் பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பவுர்ணமியை முன்னிட்டு போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களும் போலீசாருடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றினர்.
- வட மற்றும் தென் ஒத்தவாட வீதிகளில், நீண்ட வரிசையில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.
- 2 வழித்தடங்களில் உள்ள பாதைகளிலும், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வேங்கிகால்:
திருவண்ணாமலையில் இன்று மாலை ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது. இதனையொட்டி இன்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
அதிகாலை கோவிலில் நடை திறக்கும் போதே தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.
ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
வட மற்றும் தென் ஒத்தவாட வீதிகளில், நீண்ட வரிசையில் பக்தர்கள் திரண்டிருந்தனர். 2 வழித்தடங்களில் உள்ள பாதைகளிலும், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி பவுர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்திக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது.
தரிசனம் முடிந்து பக்தர்கள் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே சென்றனர்.
ராஜகோபுரத்தை காட்டிலும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அதிகாலையிலேயே உள்ளே செல்ல ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
வரிசையில் நிற்காமல், கோபுர நுழைவு வாயிலில் கூட்டமாக குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் மற்றும் பக்தர்கள் நெரிசலில் சிக்கி தவித்தனர். நசுங்கிய குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ள செல்ல முடியாமல் பல மணி நேரமாக காத்திருந்தனர்.
சிலர் குழந்தைகளை தங்களது தலை மற்றும் தோல் மீது தூக்கி சுமந்தபடி அம்மணி அம்மன் கோபுர வாசலை கடந்து உள்ளே சென்றனர். பக்தர்கள் வரிசையில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் அதனை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் அம்மணி அம்மன் கோபுர வாசலில் குவிந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணமானது.
தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து மாட வீதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்பட்டனர்.
கோவில் வெளி பிரகாரம் முதல் பொது தரிசன வரிசை, மூலவர் சன்னதி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் மாட வீதி வரை அணிவகுத்து நின்றனர்.
மேலும், பக்தர்களின் வருகை அதிகரித்திருப்பதால், அதிகாலை முதல் தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஏராளமான பக்தர்கள் நமசிவாய கோஷம் எழுப்பியபடி பரவசத்துடன் கிரிவலம் சென்றனர்.