என் மலர்
உள்ளூர் செய்திகள்
பல ஆண்டுகளாக இயங்கி வரும் வார சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு
- ஒசூரில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் வாரச்சந்தையை மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- பாரம்பரிய சந்தை அழிந்து விடும் எனவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நகரின் மையப்பகுதியில், ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில், பல ஆண்டுகளாக வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் வாரச்சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தையில், காய்கறிகள், தின்பண்டங்கள், மசாலா பொருட்கள், விவசாய கருவிகள், இரும்பு பொருட்கள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சந்தையின் மூலம் 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
ஒவ்வொரு புதன் கிழமையும் ஏராள மானோர் இந்த சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை மலிவு விலையில் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில், ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எம்ஜிஆர் மார்க்கெட்டில் உள்ள பழமையான கடைகள் இடிக்கப்பட்டு தற்போது புதிதாக கடைகள் கட்டப்பட்டு வருகிறது. இதனால், புதன்கிழமை தோறும் நடக்கும் சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வேறு இடத்தையும் மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு புதன்கிழமை சந்தை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க இந்த சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற கூடாது. அதே இடத்தில் சந்தையை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும் என சந்தை வியாபாரிகள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இல்லை யென்றால் பாரம்பரிய சந்தை அழிந்து விடும் எனவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
இதே போல் ஓசூர் அருகே பாகலூர், கெலமங்கலம், சூளகிரி, மற்றும் குந்தாரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாரத்தில் வெவ்வேறு நாட்களில், இது போன்ற பாரம்பரியமான வார சந்தைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.