search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெங்கிட்டாபுரத்தில் போக்குவரத்து சிக்னல் இயங்கவில்லை-  சிட்டாக பறக்கும் வாகனங்கள்
    X

    வெங்கிட்டாபுரத்தில் போக்குவரத்து சிக்னல் இயங்கவில்லை- சிட்டாக பறக்கும் வாகனங்கள்

    • வாகனஓட்டிகள்-பொதுமக்கள் பரிதவிப்பு
    • வெங்கிட்டாபுரம் பகுதியில் சிக்னல் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

    குனியமுத்தூர்,

    கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோடு பகுதியில் வெங்கிட்டாபுரம் அமைந்து உள்ளது. இது மூன்று ரோடுகள் சந்திக்கும் முக்கியமான பகுதி ஆகும். இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து சிக்னல் இயங்கி வந்தது. அது தற்போது செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு பறந்து செல்கின்றன. மேலும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதையும் பார்க்க முடிகிறது.

    மேலும் வெங்கிட்டாபுரம் சந்திப்பு என்பது தடாகம், காந்திபார்க், மேட்டுப்பாளையம் செல்லும் முக்கிய சாலைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. இங்கு 3 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அங்கு சுமார் 4500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதனால் வெங்கிட்டாபுரம் பகுதியில் காலை-மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது. எனவே தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொது மக்கள் நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது.

    இதுகுறித்து வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் தேவையில்லாத இடத்தில் சிக்னல் அமைத்து பயணிகளை 1-2 நிமிடம் காக்க வைக்கின்றனர். ஆனால் இது மிகவும் முக்கியமான பகுதி. தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிட்டாக பறந்து செல்கின்றன.

    அப்படியிருக்கும்போது வெங்கிட்டாபுரம் சாலையில் சிக்னல் இல்லாதது எங்களுக்கு மிகவும் சிரமம் தருகிறது. ஒருசில நேரங்களில் போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் நின்று கொண்டு வாகன போக்குவரத்தை முறைப்படுத்துவர். அந்த நேரம் மட்டும் எங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.

    ஆனால் அவர்கள் பெரும்பாலான நேரங்களில் வெங்கிட்டாபுரம் சிக்னலில் நிற்பது கிடையாது. எனவே அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தறிகட்டிய நிலையில் பறக்கின்றன. இதனால் அங்கு சாலையை கடக்க வரும் பொதுமக்கள் அங்கும்-இங்குமாக அலை க்கழிப்படும் காட்சியை பார்க்க முடிகிறது.

    வெங்கிட்டாபுரம் பகுதியில் சிக்னல் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். ஆகவே போக்குவரத்து போலீசார் இதனை கவனத்தில் கொண்டு அந்த பகுதியில் உடனடியாக போக்குவரத்து சிக்னல் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×