என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த 2 பெண்கள் கைது

- திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்
- கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருச்சி:
திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா நடமட்டம் இருப்பதாகவும், இளைஞர்கள், மாணவர்களிடம் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து ராம்ஜி நகர் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் கள்ளிக்குடி மார்க்கெட் அருகாமையில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ராம்ஜி நகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த முத்துராமன் (வயது 45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின்பேரில், ராம்ஜி நகர் பிள்ளையார் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்த ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மோகன் (32) கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்தும் 300 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. பின்னர் போலீசார் ராம்ஜி நகர் காட்டூர் தண்ணீர் தொட்டி அருகாமையில் கஞ்சா விற்பனை செய்த 2 பெண்களை கைது செய்தனர்.
விசாரணையில் கைதானவர்கள் ராம்ஜி நகர் மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கவிதா (42), ராம்ஜி நகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த நந்தினி (48)என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராம்ஜிநகர் போலீசார் பிராட்டியூர் முதல் ராம்ஜிநகர் வரை பகல், இரவு நேரங்களில் ரோந்து பணி சென்று இதுபோன்ற சமூக விரோத செயல்களை தடுத்து பொதுமக்கள் அச்சமின்றி நடமாட நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை எழுந்துள்ளது.