என் மலர்
உள்ளூர் செய்திகள்
ரூ.69 லட்சம் மதிப்புள்ள இரும்பு தளவாடங்கள் திருட்டு
- ஜார்கண்ட் மாநில பெல் நிறுவனத்துக்கு லாரிகளில் அனுப்பிய ரூ.69 லட்சம் மதிப்புள்ள இரும்பு தளவாடங்கள் திருட்டு
- பார்சல் சர்வீஸ் உரிமையாளர்கள், டிரைவர்கள் மீது புகார்
திருச்சி,
திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியில் ரீஜனல் என்ஜினீயரிங் ஒர்க்ஸ் அண்டு எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அவ்வப்போது ஆர்டரின் பேரில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் பெல் நிறுவனத்திற்கு இரும்பு தளவாட பொருட்களை லாரிகள் மூலமாக அனுப்பி வந்தது.இந்த நிலையில் கடந்த 2022 ஜூன் முதல் அக்டோபர் வரையிலான 6 மாதங்களில் 3 கண்டெய்னர்களில் 153.123 மெட்ரிக் டன் இரும்பு பொருட்களை அனுப்பினர். அதில் 64.259 மெட்ரிக் டன் இரும்பு மேற்கண்ட பெல் நிறுவனத்தை சென்றடையவில்லை. கொண்டு செல்லும் போது மர்ம ஆசாமிகள் வழியிலேயே அதனை திருடிவிட்டனர். திருட்டு போன அந்த இரும்பு தளவாடங்களின் மதிப்பு ரூ.69 லட்சம் ஆகும்.அதைத்தொடர்ந்து அங்குள்ள அதிகாரிகள் துவாக்குடி நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். அதன்பேரில் துவாக்குடி நிறுவனத்தின் மேலாளர் கார்த்திக் (வயது 31) என்பவர் துவாக்குடி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து இரும்பு தளவாடங்களை ஜார்கண்ட் மாநிலத்திற்கு ஏற்றிச்சென்ற பார்சல் சர்வீஸ் லாரிகளின் உரிமையாளர்கள் பாலாஜி (38), சரவணன் (40) ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.மேலும் சரவணனின் அலுவலக கிளார்க், தினேஷ் (35) மேலாளர் தனசேகர், எழுத்தர் ராஜா டிரைவர்கள் வெங்கடேசன் (47), சுதாகர் (40), இருதயராஜ் (45), உத்திரபதி (45), ரமேஷ் (47), கிரேன் உரிமையாளர் ஸ்டாலின் ஆகிய 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.