என் மலர்
உள்ளூர் செய்திகள்
பொன்னணியாறு-கண்ணூத்து அணைகளுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை - கலெக்டரிடம் அப்துல் சமது எம்.எல்.ஏ. மனு
- மணப்பாறை சட்டமன்ற தொகுதி 90 சதவீதத்திற்கு மேல் விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த தொழிலையும் உள்ளடக்கியுள்ளது.
- காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதிலும், மணப்பாறை தொகுதி வறட்சியில் உள்ளது.
திருச்சி,
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'சட்டமன்ற தொகுதியில் தீர்வு காணமுடியாமல் இருக்கும் பத்து பிரச்சனைகள்' அடங்கிய தொகுப்பை மாவட்ட கலெக்டர் வழியாக தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி மணப்பாறை தொகுதிக்குட்பட்ட தீர்க்கப்படாத நெடுங்காலமாக தீர்க்கப்படாமல் உள்ள மக்கள் நலத்திட்டப்பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பட்டியில் இட்டு, இந்த பணிகளை நிறைவேற்றுதன் மூலம் சாலை, விவசாயம், மாணவர்களின் கல்வி நிலை, விவசாயிகளின் வாழ்வாதாரம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவை மேம்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி, மணப்பாறை சட்டமன்ற தொகுதி 90 சதவீதத்திற்கு மேல் விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த தொழிலையும் உள்ளடக்கியுள்ளது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதிலும், மணப்பாறை தொகுதி வறட்சியில் உள்ளது. இந்த நிலையில் காவிரியின் உபரிநீரை மாயனூர் கதவணையில் இருந்து ராட்சத குழாய்கள் அனைத்து நீரேற்றும் எந்திரங்கள் மூலம் பொன்னணியாறு மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு கொண்டு வரும் திட்டத்திற்கான ஆய்வு பணிகள் கடந்த ஆட்சியின்போது ரூ.40 லட்சம் ஒதுக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தும் நிதி ஒதுக்கவில்லை.
தற்போது வரை கலைஞர் கொண்டு வந்த கூட்டு குடிநீர் திட்டம்தான் மணப்பாறை தொகுதி மக்களின் தாகம் தீர்த்து வருகிறது. ஆனாலும் மாயனூர் கதவணையில் இருந்து பொன்னணியாறு, கண்ணூத்து அணைகளுக்கு தண்ணீர் கொண்டு வருவது 50 ஆண்டுகால கனவாகும். எனவே அந்த திட்டத்தை செயல்படுத்த ஆவண செய்யவேண்டும். மணப்பாறை தொகுதிக்குட்பட்ட மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 1996-க்கு முன்பு அரசால் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் மக்கள் குடியிருக்க தகுதியற்றதாக உள்ளது. எனினும் அந்த வீடுகளில் இன்று வரை மக்கள் வசித்து வருகின்றனர். அனைத்து தொகுப்பு வீடுகளையும் இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தரவேண்டும்.
மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் 49 ஊராட்சிகளை உள்ளடக்கியது. அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதில் காலதாமதம் ஏற்படுவதால் நிர்வாக வசதிக்காக மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டு ஒன்றியங்களாக பிரித்து அமைக்க வேண்டும். மருங்காபுரி வட்டம் கள்ளக்காம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, மணப்பாறை வட்டம் ஆனாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, புத்தாநத்தம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, வீ.பூசாரிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைபள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் மற்றும் சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அப்துல் சமது எம்.எல்.ஏ., திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமாரிடம் வழங்கினார்.