என் மலர்
உள்ளூர் செய்திகள்
பார்வையற்றோர் திடீர் சாலை மறியல்
- பார்வையற்றோர் திடீர் சாலை மறியல் நடைபெற்றது.
- 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி
திருச்சி:
திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதி ராயல் சாலையில் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போலீசார் எதிர்ப்பையும் மீறி நடை பெற்ற இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பொருளாளர் வரதராஜன், செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையற்றவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் வருவாய் துறையின் மூலம் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ. ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்டி கடை வைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். நலிவுற்ற இசை கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகையை பார்வையற்ற இசை கலைஞர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் கொண்டு செல்லும் பொருட்களுக்கு சுமை கட்டணத்தை விலக்கு அளிக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு என தொழில் கூட்டத்தை அரசு ஏற்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தினால் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக ராயல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.