என் மலர்
உள்ளூர் செய்திகள்
வேலூரில் 1200 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
- நோய் பாதிப்புக்குள்ளான நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது
- 3 நாட்கள் நாய்களின் உடல்நிலை கண்காணிக்கப்படும் என அதிகாரி தகவல்
வேலூர், டிச.28-
வேலூர் மாநகராட்சியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தது. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் வேலூர் முத்துமண்டபம் அருகே உள்ள நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர இன்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் சுனில் குமார், கமிஷனர் அசோக் குமார், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மேயர் சுஜாதா கூறியதாவது:-
வேலூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் சுமார் 12 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பதாக தெரிய வருகிறது. அந்த நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக 1,200 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
சிகிச்சைக்கு பின் அந்த நாய்கள் மீண்டும் பிடிக்கப்பட்ட பகுதிகளிலேயே விடப்படும். இதற்காக தற்போது ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு நாய்க்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள சுமார் ரூ.1,650 செலவாகும். இதில் ரூ.825 மாநகராட்சி சார்பில் செலவிடப்படுகிறது. மீதமுள்ள தொகை பிராணிகள் வதை தடுப்பு சங்கம் கொடுக்கும். கருத்தடை செய்த பின்பு 3 நாட்கள் நாய்களின் உடல்நிலை கண்காணிக்கப்படும்.
மேலும் இந்த மையத்தில் நாய்களுக்காக பரவும் நோயை கட்டுப்படுத்த தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது. வெறி, சொறி நோய் பாதிப்புக்குள்ளான நாய்களுக்கு தடுப்பூசி போடுவதுடன், குடற்புழு மருந்தும் வழங்கப்பட்டு கருத்தடையும் மேற்கொள்ளப்படுகிறது.
கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நாய்கள் குறித்து அந்தந்த பகுதி பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மனிதாபிமானத்தின் அடிப்படையில் நாய்களுக்கு பொதுமக்கள் உணவு, தண்ணீர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது பிராணிகள் வதை தடுப்பு சங்க உறுப்பினர்கள் குமரேஸ்வரன், ருக்ஜி ராஜேஷ், பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.