என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூரில் ஆன்லைன் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாக வாலிபரிடம் ரூ.32 லட்சம் மோசடி
- வீட்டில் இருந்த நகையை அடகு வைத்து ஏமாந்த அவலம்
- பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
வேலூர்:
வேலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு வீட்டிலிருந்தே வேலை தருவதாக கூறி ஆன்லைனில் விளம்பரம் வந்தது.
அதனை வாலிபர் பின் தொடர்ந்தார். அப்போது மர்ம நபர்கள் செல்போனுக்கு ஒரே லிங்க் அனுப்பினர்.
அதில் அதிக பொருட்கள் மற்றும் ஓட்டல்களை காட்டி இதில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என தெரிவித்தனர். முதலில் 100 ரூபாய் 150 ரூபாய் என வாலிபர் அந்த லிங்கில் முதலீடு செய்தார்.
அதில் அவருக்கு இரண்டு முதல் 3 மடங்கு லாபம் கிடைத்ததாக கணக்கு காட்டியது.
அதிக பணம் கிடைக்கும் என்று ஆசையில் தொடர்ந்து வாலிபர் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் ஆன்லைனில் முதலீடு செய்து கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்த பணம் தீர்ந்து போனது.
இதனால் வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து பணத்தை கொண்டு வந்து ஆன்லைனில் முதலீடு செய்தார். மேலும் வங்கியில் கடன் வாங்கியும் அவர் பணம் கட்டியுள்ளார். ரூ.32 லட்சம் வரை வாலிபர் பணத்தை கட்டிய பிறகு அதனை எடுக்க முயன்றார்.
ஆனால் முடியவில்லை. ஆன்லைன் முதலீடுகளை முழுவதாக முடித்தால்தான் பணத்தை எடுக்க முடியும் என அதில் தெரிவித்தனர்.
அப்போதுதான் வாலிபர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இது குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா மற்றும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் வரும் வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தி பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.