என் மலர்
உள்ளூர் செய்திகள்
நெல்மூட்டை, வாழைகளை நாசம் செய்த காட்டு யானை
வேலூர்:
குடியாத்தம் அருகே பக்கத்து கிராமத்திற்கு குடி புகுந்த காட்டு யானையால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கதிர்குளம் கிராமத்தில் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக ஒற்றை காட்டு யானை முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது.
இதனால் அந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லாமல் வீடுகளிலே முடங்கினர். மேலும் அந்த கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
காட்டு யானைக்கு பயந்து கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை அறுவடைக்கு முன்னதாகவே விவசாயிகள் அறுவடை செய்தனர்.
இந்த நிலையில் கதிர்குளம் கிராமத்தில் இருந்து வெளியேறி, மேல்அனுப்பு கிராமத்திற்குள் புகுந்தது காட்டு யானை. விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி என்பவரின் நிலத்தில் அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மற்றும் நெல் பயிர்களை மிதித்து சேதம் செய்தது.
அதேபோல் அதே கிராமத்தைச் சேர்ந்த வனஜா என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் மற்றும் வேர்க்கடலை பயிர்களையும் சேதப்படுத்தியது.
பகல் நேரங்களிலும் கிராமத்திற்குள் ஒற்றைக் காட்டு யானை சுற்றி வருவதால் கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காட்டு யானை அட்டகாசம் செய்து வருவதால், அதனை தடுக்கவோ அல்லது பிடித்து வேறு பகுதியில் விடவோ வனத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காட்டு யானையை பிடித்து உடனடியாக வேறு பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.