என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆந்திர எல்லையோர சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
வேலூர்:
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சாலை சந்திப்புகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாஜக கட்சி அலுவலகங்கள் பாஜக இந்து முன்னணி பிரமுகர்கள் வீடுகளிலும் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் மற்றும் 200 பயிற்சி காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வேலூர் கஸ்பா, ஆர்.என்.பாளையம், கொணவட்டம், பேர ணாம்பட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில் உள்ள 7 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் கேமராக்கள் மூலமாக வாகனங்கள் கண்காணித்து வருகின்றனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகள் உடைமைகள் சோதனை செய்யப்படுகிறது. ரெயில்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். வருகிற 2-ந்தேதி வரை சோதனை தீவிர படுத்த முடிவு செய்துள்ளனர்.