என் மலர்
உள்ளூர் செய்திகள்
மலை கிராமங்களில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த விஜய் வசந்த் எம்.பி.
- தச்சன்மலை கிராமத்தில் ரேசன் கடைக்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
- முதலமைச்சரை சந்தித்து மலைவாழ் மக்களின் குறைகளை உள்ளடக்கிய மனு அளித்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், பேச்சிப்பாறை பகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த முதலமைச்சரை சந்தித்து இந்த குறைகளை தீர்க்க கோரிக்கை மனு அளித்துள்ளார்.
மேலும் தச்சன்மலை கிராமத்தில் ரேஷன் கடை இல்லாததால் அந்த கிராமத்து மக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ஆற்றை கடந்து செல்ல வேண்டும் என்ற நிலைமை இருப்பதை அறிந்து, பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 13 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. கூறியிருப்பதாவது:-
பேச்சிப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களில் சுமார் 10000 மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமங்கள் அமைந்துள்ள புவியியல் அமைப்பு காரணமாக முக்கிய நிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் குறைகளை கேட்டறிவதற்காக இந்த கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்டேன். அங்கு கூடியிருந்த மக்கள் தங்கள் குறைகளை முன் வைத்தனர். இந்த ஊர்களில் மின்சார வசதி இல்லாததால் மக்கள் அவதிப் படுவதை அவர்கள் எடுத்து சொன்னார்கள்.
மேலும் தரமான சாலை வசதிகள் இல்லாததால் அவர்கள் முக்கிய நகரங்களுக்கு படிக்க செல்லவும், வேலைக்கு செல்லவும், மருத்துவமனைகளுக்கு செல்லவும் சிரமப்படுகின்றனர். அருகில் அரசு மருத்துவமனை எதுவும் இல்லாததால் அவர்கள் பல மணி நேரம் பயணம் செய்து மருத்துவ வசதிகள் தேட வேண்டிய அவல நிலை உள்ளது. ஆற்றை கடந்து படகுகள் மூலம் இந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் அல்லது சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மக்கள் கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருப்பதையும் எடுத்து கூறினர்.நூறு நாள் வேலை திட்டத்தில் அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். குறைகளை கேட்டு ஆவன செய்ய உறுதி அளித்தேன்.
இதை தொடர்ந்து கன்னியாகுமாரி மாவட்டத்திற்கு வந்திருந்த முதலமைச்சரை நேற்று நேரில் சந்தித்து மலைவாழ் மக்களின் குறைகளை உள்ளடக்கிய மனு ஒன்றினை அளித்தேன். மலையோர கிராமங்களில் மின்சார வசதி இல்லாத ஊர்களுக்கு மின்சாரம் வழங்கிட சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களை இந்த ஊர்களில் அமைக்க வேண்டும் எனவும், சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும், இந்த ஊர்களில் மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன். மேலும் தொலைத்தொடர்ப்பு வசதிகள் ஏதும் இல்லாத இந்த ஊர்களில் வனத்துறை அனுமதியுடன் அலைபேசி கோபுரங்கள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன். மேலும் வருகின்ற பாராளுமன்ற கூட்டத் தொடரில் இது குறித்து மத்திய அரசுக்கும் கோரிக்கை வைக்கப்படும் என தெரிவித்தேன்.
இவ்வாறு விஜய் வசந்த் கூறியுள்ளார்.