search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை
    X

    கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை

    • விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.
    • விவசாய கடன் அட்டை அனைத்து விவசாயிகளும் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    எம்.எஸ்.எம்.இ. திட்டத்தினை விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியமைக்கு பிரதமரிடமிருந்து முதல் பரிசு பெற்றமைக்கு கலெக்டருக்கு, மாவட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக மாற்றிடும் திட்டத்தின் கீழ், விருதுநகர் வட்டாரத்தைச் சேர்ந்த மணிமாறன், ஸ்ரீநாத் பிரகதீஸ்குமார் ஆகியோருக்கு அக்ரி கிளினிக் அமைக்க தலா ரூ.1லட்சம் மானியமாக வழங்கும் செயல்முறை ஆணையை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் மரங்கள் நடுவதற்கு தகுதியான இடங்களை கண்டறிந்து வனத்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சிதுறையின் மூலம் மரக்கன்றுகளை நட விவரம் சேகரிக்கப்பட உள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தில் தற்போது பெரும் மாற்றம் செய்யப்பட்டு விவசாயிகளின் ஆதார் அட்டை விவரங்கள் மற்றும் நில விபரங்களை பதிவு செய்து நல்ல முறையில் நடைபெற்று வருவதால் பதிவு செய்யாதவர்கள் விரைவில் பதிவு செய்ய வேண்டும்.

    விவசாய கடன் அட்டை அனைத்து விவசாயிகளும் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    விவசாய கடன் அட்டை விரும்புவோர் சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் விண்ணப்பித்து விவசாய கடன் அட்டை பெறலாம். சர்க்கரை ஆலை நிறுவனத்தினர் உறுதியளித்தவாறு கொள்முதல் கிரைய தொகையினை விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அனைத்து வரத்துக் கால்வாய்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன் உள்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×