search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டும்-அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
    X

    ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசிய காட்சி. அருகில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா மற்றும் பலர் உள்ளனர்.

    குடிநீர் திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டும்-அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

    • தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் பணிகள், மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • நீர் ஆதாரங்களை கண்டறிந்து அவற்றின் மூலம் குடிநீர் தேவைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தென் மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    ஆய்வுக்கூட்டம்

    இதற்காக நேற்றிரவு மதுரையில் இருந்து கார் மூலம் அவர் தூத்துக்குடிக்கு வந்தடைந்தார். அங்கு மறவன்மடம் பகுதியில் இரவு தங்கிய அவர் இன்று காலை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தலைமை தாங்கி பங்கேற்றார்.

    இதில் கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் நகராட்சிதுறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா, கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ் ராவ், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிதுறை சார்ந்த அதிகாரிகள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் பணிகள், மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    அமைச்சர் கே.என். நேரு

    பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைத்திட குடிநீர் திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து பணிகளையும் அலுவலர்கள் துரிதமாக நிறைவேற்றிட வேண்டும்.

    நீர் ஆதாரங்களை கண்டறிந்து அவற்றின் மூலம் குடிநீர் தேவைகளை நிறைவேற்றிடவும் உரிய நடவடிக்கைகளை அலுவலர்கள் எடுக்க வேண்டும், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்பட்டால் லாரி மூலமாவது சப்ளை செய்ய வேண்டும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

    முடிவுற்ற திட்டப்பணிகள்

    தொடர்ந்து கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள உழவர்சந்தை பகுதியில் மாநகராட்சியில் ரூ. 71 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை கனிமொழி எம்.பி. முன்னிலையில் அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.

    அப்போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து அவர் காரில் நெல்லை மாவட்டத்திற்கு புறப்பட்டார்.

    Next Story
    ×