என் மலர்
உள்ளூர் செய்திகள்
ரூ.5 கோடி கேட்டு பெண் உள்பட 3 பேர் காரில் கடத்தல்
- கடந்த 26-ந் தேதி அனுராதா மற்றும் கடை ஊழியர்கள் பிரபு, ரவிச்சந்திரன் ஆகியோர் கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர்.
- ரூ.5 கோடி கேட்டு பெண் உள்பட 3 பேரையும் காரில் கடத்திய 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி இந்திரா நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி அனுராதா (வயது 36). இவர் கர்நாடக மாநிலம் ஒசகோட்டாவில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 26-ந் தேதி அனுராதா மற்றும் கடை ஊழியர்கள் பிரபு, ரவிச்சந்திரன் ஆகியோர் கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர்.
அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார் ஓசூர் அருகே ஏ.செட்டிப்பள்ளி-சூளகிரி சாலையில் ஜாகீர்பாளையம் பகுதியில் வந்தது. அப்போது பின்னால் காரில் வந்த நபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அனுராதா சென்ற காரை முந்தி சென்று வழிமறித்து நிறுத்தினர்.
பின்னர் காரில் இருந்து இறங்கிய 7 பேர் அனுராதா, பிரபு, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரையும் வலுகட்டாயமாக இழுத்து தாங்கள் வந்த காரில் கடத்தி சென்றனர். அங்கிருந்து சேலம் சென்ற அந்த நபர்கள் ரூ.5 கோடி கொடுத்தால் ஊழியர்கள் 2 பேரையும் விட்டு விடுவதாக அனுராதாவிடம் கூறினர். அவ்வளவு தொகை என்னால் கொடுக்க முடியாது என அனுராதா கூறி உள்ளார்.
பின்னர் ரூ.1 லட்சம் தருவதாக அவர் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் அனுராதா தன்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி ரூ.1 லட்சத்தை எடுத்து அந்த நபர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அனுராதா, பிரபு, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரையும் அந்த நபர்கள் சேலம் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகில் இறக்கி விட்டு சென்று விட்டனர்.
பின்னர் அங்கிருந்து சூளகிரி சென்ற அனுராதா நடந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரூ.5 கோடி கேட்டு பெண் உள்பட 3 பேரையும் காரில் கடத்திய 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.