என் மலர்
உள்ளூர் செய்திகள்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வண்ணார்பேட்டையில் அங்கன்வாடி கட்டிடத்தை புனரமைத்த வாலிபர்கள்

- பள்ளி ஆங்காங்கே சிதிலமடைந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.
- இளைஞர்களின் முயற்சியில் பல்வேறு விதமான புனரமைப்பு பணிகள் இந்த பள்ளியில் செய்யப்பட்டுள்ளன.
நெல்லை:
நெல்லை மாநகரின் மையப்பகுதியில் வண்ணார் பேட்டை அமைந்துள்ளது. இங்கு 2,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் பலர் கூலி தொழில் செய்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வருபவர்கள். அவர்களது குழந்தைகள் அப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி அங்கன்வாடி பள்ளியில் தங்களது தொடக்கப்பள்ளி படிப்பை படித்து வந்தனர்.
தற்போது அந்த பள்ளி ஆங்காங்கே சிதிலமடைந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. தற்போது அந்த பள்ளியில் 40 குழந்தைகள் வரை படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியை சீரமைக்க வேண்டும் என அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பல்வேறு இடங்களில் கோரிக்கை வைத்தனர்.
தற்போது 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அப்பகுதி இளைஞர்களின் முயற்சியில் பல்வேறு விதமான புனரமைப்பு பணிகள் இந்த பள்ளியில் செய்யப்பட்டுள்ளன.
பள்ளி முழுவதும் சிதலமடைந்த இடங்கள் புதுப்பிக்கப்பட்டு வகுப்பறை, சுற்றுச் சுவர், கரும்பலகை உள்ளிட்டவைகள் வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்கள் ஓவியங்கள், விலங்குகள், மலர்கள், பழம், காய் போன்ற ஓவியங்கள் கார்ட்டூன் சித்திரங்கள் ஆகியவை இளைஞர்களின் முயற்சியால் வரையப்பட்டுள்ளது.
மேலும் அந்த பள்ளியில் உள்ள தோட்டம், குடிநீர் தொட்டிகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு புதிய பொலிவு பெற்றுள்ளது. இளைஞர்களின் இந்த முயற்சி அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இந்த பள்ளியின் அருகே செயல்பட்டு வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியும் சிதிலமடைந்து காணப்படுவதை அரசு கவனம் செலுத்தி புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.